அதிமுகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர திட்டமா? நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்: ராகுல்காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் பாராட்டு

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் புகழாரம் சூட்டி இருக்கிறார். ‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி’ என அவர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மக்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். உணவு அருந்திக் கொண்டே கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதில் அளித்தார்.

இது அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், இணையதளத்தில் வெளியான இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ராகுல் காந்தியின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, செல்லூர் ராஜு திடீர் புகழாரம் சூட்டியுள்ளார். அதில்,‘‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி” என செல்லூர் ராஜு பதிவிட்டுள்ளார்.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அதிமுக வட்டாரத்திலும் தற்போது பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. செல்லூர் ராஜுவின் இதுபோன்ற நடவடிக்கையால், அதிமுகவில் இருந்து விலகி காங்கிரசில் சேருவாரா என்ற பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. காரணம், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரெதிர் கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. தேர்தல் நேரத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணவகத்தில் சாப்பிடும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்ததுடன், அவரை மிகவும் பாராட்டி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து செல்லூர் ராஜு விளக்கம் அளித்தபோது, ‘காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எளிமையாக யார் இருந்தாலும் அவர்களை நான் பாராட்டுவேன்’ என்று பதிவு செய்துள்ளார். ஆனால் அதிமுக கட்சி தலைமை செல்லூர் ராஜுவின் கருத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்ணனுக்கு நன்றி: முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி\” என புகழாரம் சூட்டியிருந்தார். செல்லூர் கே.ராஜுவின் இந்த பதிவை மேற்கொள்காட்டி அண்ணனுக்கு நன்றி என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post அதிமுகவிலிருந்து விலகி காங்கிரசில் சேர திட்டமா? நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்: ராகுல்காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: