வனத்துறை அனுமதி இல்லாததால் தார்ச்சாலை பணி முடக்கம்-மீண்டும் தொடங்குவது எப்போது

வருசநாடு : வருசநாடு-வாலிப்பாறை இடையே 5 கி.மீ தூரத்திற்கு வனத்துறை அனுமதிகாததால், தார்ச்சாலை சீரமைப்பு பணி முடங்கிக் கிடக்கிறது.  வருசநாடு முதல் வாலிப்பாறை வரை சுமார் 10 கி.மீ தூரத்திற்கு தார்ச்சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதை சீரமைக்க பொதுமக்களின் கோரிக்கையையேற்று 2 ஆண்டுகளுக்கு முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது குறிப்பிட்ட பகுதி சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி, தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு வருசநாடு வனத்துறை தடை விதித்தது.

 இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது.பாக்கியுள்ள 5 கிலோ மீட்டர் தூர பகுதியில் தார்ச்சாலை அமைக்க தற்போது வரை வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால், அந்த பகுதியில் மட்டும் சாலை மிகவும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது.

 இதனால், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் விவசாய விளைபொருட்களை தேனி, சின்னமனூர் கம்பம் மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு உரிய நேரத்தில் விவசாயிகளால் கொண்டு செல்ல முடியவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, வருசநாடு-வாலிப்பாறை இடையே முழுமையாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: