மருத்துவத் துறையில் கியூபா போல் தமிழகம் உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பனிமலர் மருதுவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் உள்பட பல்வேறு மருத்துவ மையங்கள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் ப.சின்னதுரை தலைமை வகித்தார். இயக்குனர்கள் சி.சக்திகுமார், சரண்யா ஸ்ரீ சக்திகுமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி டீன் சி.இளம்பரிதி வரவேற்றார். விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி மருத்துவ மையங்களை திறந்து வைத்து அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

 

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 கே.எல்.ஆக்சிஜன் டேங்க் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கொரோனாவின் பல்வேறு அலைகளில் பெரிய பாதிப்புகளில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு வந்து இருப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம். தடுப்பூசியை ஒரு இயக்கமாக முதல்வர் மாற்றினார். இந்தியாவில் 17 வயதினருக்கு தடுப்பூசி போட்டதிலும், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போட்டதிலும், தடுப்பூசிகளை வீணாக்காமல் இருப்பதிலும் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று இறப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. ஒட்டு மொத்த மக்கள் ஒருங்கிணைந்ததால் இந்த சாதனை செய்ய முடிந்தது. மேலும் உலகை விட்டு கொரோனா தொற்று முடியவில்லை. இன்னும் 2 மாதங்கள் கட்டாயம் மக்கள் தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மருத்துவ துறையில் கியூபா போல் தமிழகம் உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், கல்லூரி துணை முதல்வர் எஸ்.கிருஷ்ணமோகன், மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.சபாரத்தினவேல், ஒன்றிய குழுத்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், பா.ச.கமலேஷ், ஜெ.சுதாகர், நகராட்சி கவுன்சிலர் எஸ்.அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: