கணவன் vs மனைவி

நன்றி குங்குமம் தோழி

பெண் மைய  சினிமா

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், இன்று நடப்பதே வேறு. திருமணம் நடந்த அன்றே அல்லது அடுத்த நாளே கூட விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடிய தம்பதிகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். உலகளவில் நடக்கும் விவாகரத்துகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவு. கலாச்சாரம், குடும்ப உறவுகள், சமூக அறம் போன்றவை இந்தியாவில் விவாகரத்துகளைத் தடுத்து நிறுத்திஇருக்கிறது. ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விவாகரத்து வழக்குகளுடன் ஒப்பிடும்போது இப்போது அதிகம். இந்தியாவில் நடக்கும் நூறு திருமணங்களில் ஒன்று விவாகரத்தில் முடிகிறது என்கிறது ஆய்வு.

தவிர, பெரும்பாலும் திருமணத்துக்கு முன்பு எப்படியிருந்ததோ அதே மாதிரி தான் திருமணத்துக்குப் பின்னாலும் ஆண்களின் வாழ்க்கை இருக்கிறது. ஆனால், திருமணத்துக்கு முன்பான வாழ்க்கையை திருமணத்துக்குப் பின்னும் தொடரும் பெண்ணைக் காண்பது அரிது. திருமணத்துக்குப்பின் முற்றிலுமே பெண்களுடைய வாழ்க்கை மாறிவிடுகிறது. அப்படி மாறிவிட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாமலும், தன் மகனை விட்டுப் பிரிய முடியாமலும் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை தான் ‘Kramer vs. Kramer’. அத்துடன் மனைவி பிரிந்துபோய்விட்டால் கணவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் திண்டாடும் என்பதையும் ஆழமாக பதிவு செய்கிறது இந்தப் படம்.

விளம்பரத்துறையில் வேலை செய்கிறார் டெட் கிராமர். தனது வேலையில் திறமைசாலி. எந்த நேரமும் வேலை, வேலை என்றே இருப்பவர். அதனால் உயர்ந்த பதவி அவருக்குக் கொடுக்கப்பட்டு முக்கியமான பணி ஒன்று அவரது பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவி ஜோன்னாவுடனும், ஐந்து வயதான மகன் பில்லியுடனும் பகிர்ந்துகொள்ள வீட்டுக்கு வருகிறார் டெட். ஆனால், ஜோன்னாவோ கணவனையும் குழந்தையையும் பிரிந்து வெளியே கிளம்ப தயாராக இருக்கிறார். இத்தனைக்கும் பில்லி என்றால் அவளுக்கு உயிர். பல மாத யோசனைக்குப் பிறகுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாள். அதற்காக வீட்டிலிருக்கும் தனது பொருட்களை எல்லாம் பேக் செய்துகொண்டிருக்கிறாள். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்த டெட்டிற்கு எதுவும் புரியவில்லை.

ஜோன்னாவுடன் என்ன நடந்தது என்று விவாதிக்கிறார். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்ட பில்லி அழுகிறான். ஜோன்னாவை சமாதானப்படுத்த டெட் எவ்வளவோ முயல்கிறார். இருந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள் ஜோன்னா. பில்லியைத் தன்னுடன் அழைத்துப்போனால் இப்போது இருக்கும் நிலையில் வளர்க்க முடியாது என்று டெட்டிடமே விட்டுவிடுகிறாள். ‘‘காரணம் எதுவுமில்லை. நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கான வாழ்க்கையைத் தேடிப்போகிறேன்...’’ என்று டெட்டிடம் சொல்லிவிட்டு பில்லியைப் பிரிந்து கிளம்புகிறாள். இனி அம்மா திரும்பி வர மாட்டாள் என்ற விஷயம் பில்லிக்குத் தெரியாது.

அடுத்த நாள் விடிகிறது. வீட்டில் அம்மா இல்லை. பில்லிக்கு உணவு தயாரிக்க வேண்டும். அவனைப் பள்ளியில் கொண்டுபோய்விட வேண்டும். அவசரம் அவசரமாக எழுந்திருக்கிறார் டெட். முதன் முதலாக சமையல் அறைக்குள் கால் வைக்கிறார். சமையலில் சொதப்புகிறார். எதையும் சரியாக செய்ய முடியவில்லை. பில்லிக்கும் டெட்டிற்கும் இடையில் நல்ல இணக்கம் இல்லை. மனைவி இல்லாததால் காலைப் பொழுதே தலைகீழாக மாறுகிறது.

ஒப்புக்கு பில்லிக்கு சமைத்துக்கொடுத்து பள்ளிக்குத் தயார் செய்கிறார். பில்லியை பள்ளியில் கொண்டுபோய் விட்ட பிறகு தாமதமாக அலுவலகம் செல்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக காலையில் சமைப்பது, பில்லியை  தயார்  செய்வது என எல்லா வேலைகளையும் செய்தவர் ஜோன்னா. ஒரே நாளில் மனைவியின் இல்லாமையை உணர்கிறார் டெட். அலுவலகத்தில் அவரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. மாலையில் சீக்கிரமே கிளம்பி பள்ளியிலிருந்து பில்லியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். வெறுமனே அலுவலக வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த டெட்டிற்கு மகனை கவனித்துக்கொள்ள வேண்டிய ஒரு பொறுப்பும் கூடுகிறது. அதனால் அவரால் வேலையை சரியாக செய்ய முடியவில்லை. வேலையை சரியாக செய்யாத அவரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்குகிறது. முன்பு வாங்கிய சம்பளத்தைவிட குறைந்த சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்கிறார்.

நாட்கள் ஓடுகின்றன. பில்லிக்கும் டெட்டிற்கும்  இடையில் நல்ல இணக்கம் ஏற்படுகிறது. அப்பாவையும் நேசிக்கத் தொடங்குகிறான் பில்லி. அப்பாவின் நிலையை புரிந்துகொள்கிறான். பதினைந்து மாதங்களுக்குப் பிறகு ஜோன்னா திரும்பி வருகிறாள். இப்போது அவள் நல்ல வேலையில் இருக்கிறாள். கணவனைவிட அதிகமாக சம்பாதிக்கிறாள். மகனை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு வருகிறது. பில்லியைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு டெட்டிடம் முறையிடுகிறாள். டெட் மறுக்கிறான். பில்லி யாரிடம் இருக்க வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. பில்லி அம்மாவுடன் சென்றானா? இல்லை அப்பாவுடனே இருந்துவிட்டானா? என்பதை தெரிந்துகொள்ள இப்படத்தை பாருங்கள்.

கணவன் - மனைவிக்கு இடையில் எப்போது விரிசல் விட ஆரம்பிக்கிறது. உண்மையிலுமே மனைவி என்பவள் எதை எதிர்பார்க்கிறாள். குடும்பத்தை நல்லபடியாக நகர்த்த ஒரு பெண்ணின் பங்கு எவ்வளவு முக்கியமானது. மனைவி பிரிந்துபோய்விட்டால் கணவன் என்ன மாதிரியான சிக்கல்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை  அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராபர்ட் பென்டன். சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>