மாசில்லா நகரை உருவாக்கும் பசுமை பேருந்து

நன்றி குங்குமம் தோழி

சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தும் நிலையிலும் அந்த பஸ்சில் குளுகுளு என காற்று வீசியது. அது ஒன்றும் தனியார் பேருந்து அல்ல. அதில் குளிர்சாதனமும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் அந்த பேருந்தில் சிலுசிலுவென காற்று வீசுகிறது. அதற்கு காரணம் உள்ளே நுழைந்ததும் பஸ் டிரைவரின் முன்புறம் ஆங்காங்கே கண்ணாடியை ஒட்டி சில பசுமையான செடிகள்.

இவை யாவும் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட செயற்கை பூஞ்செடிகள் அல்ல. அதில் இருந்து பூக்கள் சில பேருந்து முழுதும் மணம் பரப்பிக்கொண்டிருந்தது. சில பெண்கள் அதில் இருந்த பூக்களை பறித்து தலையில் சூடிக்கொள்கிறார்கள். இவ்வாறு அந்த பஸ்சை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வாகனமாக மாற்றிய பெருமை அதில் டிரைவராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற நாராயணப்பாவை தான் சேரும் என்கின்றனர் அதில் பயணம் செய்த பயணிகள்.

KA07 F 838 என்ற பதிவு எண் கொண்ட அந்த பேருந்து, பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ். காவல் பைலசந்திரா முதல் யஷ்வந்த்பூர் வரை இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் தான் செடி, கொடி, மலர் என இயற்கையாகவே பூத்துக்குலுங்குகின்றன. அதில் டிரைவராக பணியாற்றிய நாராயணப்பா தான் இந்த செடிகளை ஊன்றி பராமரித்து வந்தார். இப்போது அதற்கு உரங்கள் போடுவது முதல் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவது வரையிலான பணியை இதில் பயணம் செய்யும் பயணிகள் மேற்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுவிட்ட நாராயணப்பா இது பற்றி கூறுகையில், ‘`கடந்த 27 ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்தேன். எனக்கு இயற்கையிலேயே மரம் செடி கொடிகள்வளர்ப்பதில் ஆர்வம் உண்டு. கடந்த 2 ஆண்டுக்கு முன் சில பூஞ்செடிகளை வாங்கி வந்து பஸ்சின் முன்புறமும் பின்புறமும் மண்தொட்டியில் ஊன்றி வைத்து பராமரித்து வந்தேன். தற்போது இந்த பஸ்சில் 14 செடிகள் உள்ளன. முன்புறம் உள்ள செடி பஸ் கம்பிகள் வழி படர்ந்து இயற்கையான அலங்காரமாக மாறிவிட்டது.

எனது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் செடிகள் வளர்ப்பார்கள். அதை பார்த்து தான் எனக்கும் செடி வளர்க்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டது. நான் அதிக நேரம் பஸ்சில் செலவிடுவதால் செடிகளை வாங்கி வந்து பஸ்சிலேயே வளர்க்க தொடங்கினேன். இப்போது மினி லால்பாக் என்னும் அளவுக்கு இந்த பஸ் பசுமை நிறைந்ததாக காணப்படுகிறது.

வாகனங்கள் வெளியிடும் புகைகளுக்கு நடுவே சுற்றுப்புறத்தை பசுமையாக்க என்னால் இயன்ற சிறு உதவிதான் பஸ்தோட்டம். இப்போது அந்த பஸ்சில் உள்ள மினி தோட்டத்தை பராமரிக்கும் பணியை பஸ் பயணிகள் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சமீபத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்த புஷ்பாபிரேயா என்ற பயணி அந்த குட்டி தோட்டத்தை படம் பிடித்து ‘என்னை கவர்ந்த பசுமை பஸ்’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பதிவிட்டதை தொடர்ந்து இப்போது இந்த பஸ்சின் புகழ் வெளி உலகத்தில் பரவத்தொடங்கி விட்டது.

மேலும் என்னை சர்வதேச சேனல்கள், செய்தி நிறுவனங்கள் பேட்டி காணும் அளவுக்கு அந்த செடிகள் என்னை வளர்த்துள்ளது. எப்படியோ மூச்சு விட திணறும் பெங்களூர் மாநகரில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் போது பசுமை பஸ்சின் அருமை கொரோனாவில் இருந்து தப்பிய பயணிகளுக்கு புரியும்’’ என்றார்நாராயணப்பா.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: