உக்ரைனில் வெளிவரும் மனிதாபிமான அவசரநிலை கவலை அளிக்‍கிறது!: பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என WHO தகவல்..!!

ஜெனிவா: உக்ரைனில் வெளிவரும் மனிதாபிமான அவசர நிலை குறித்து உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளது. உக்ரைன் மீது 8வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். மோதல் தீவிரம் அடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். தலைநகர் கீவ் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனில் வெளிவரும் மனிதாபிமான அவசரநிலை குறித்து உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம், உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார். போரில் ஏற்பட்ட தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கும் உலக சுகாதார மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவசர அறுவை சிகிச்சைக்கான பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் பேரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பிற சுகாதார பொருட்கள் போலந்தில் தஞ்சம் அடைந்துள்ள உக்ரைன் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மருத்துவமனைகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகள் மீதான ஏவுகணை தாக்குதல்களும் அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளும் கவலை அளிப்பதாக டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், மக்களோடு மக்களாக அகதிகளாக குவிந்திருப்பதால் மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Related Stories: