ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

எச்சரிக்கை

ரத்த அழுத்தம் என்பது ஒரே அளவில் இருப்பதில்லை. சற்று மாறுபாடான அளவைக் கொண்டதாகவே இருக்கும். இதில் உயர் ரத்த அழுத்தம் என்பது வழக்கமான அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமாகிவிடும். இதுபோல் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம் எது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வு இந்தியர்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டது என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்தியர்களின் இதய செயல்பாடு குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 9 மாதங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 15 மாநிலங்களில் உள்ள 355 நகரங்களை சேர்ந்த 18,918 ஆண்கள், பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், 19 மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் பின்வரும் முடிவுகள் கிடைத்துள்ளது.

பொதுவாக ஓய்வில் இருப்பவர்களுக்கு இதய துடிப்பு நிமிடத்துக்கு 72 தடவை இருக்கும். ஆனால், இந்தியர்களின் சராசரி இதய துடிப்பு அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக 72-க்கு பதில் 80 ஆக உள்ளது. மற்ற நாடுகளில் இருப்பதைப் போல் அல்லாமல் இந்தியர்களின் ரத்த அழுத்தமும் மாலையில்தான் அதிகமாக காணப்படுகிறது. ரத்த அழுத்தம் மற்ற நாடுகளில் காலையில் அதிகமாகவும் மாலையில் குறைவாகவும் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘உயர் ரத்த அழுத்தத்திற்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவில் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரத்த அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என்கிறார் ஆராய்ச்சியை மேற்கொண்ட இந்திய இதய ஆய்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மருத்துவருமான சுமித்ரா குமார்.

- கௌதம்