இ சிகரெட்டுக்கு தடை

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

இ-சிகரெட்டுக்கு தடை விதித்து மத்திய அரசு 19-9-2019 அன்று ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இ-சிகரெட்டை தயாரிப்பது, விற்பனை, இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் விளம்பரம் செய்வது இந்த சட்டப்படி குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட உள்ளது.

டெல்லியில் 18-9-2019 அன்று பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இ-சிகரெட்டை பயன்படுத்துவதால் மக்களின் உடல்நலனுக்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே, இதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இ-சிகரெட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 19 அன்று பிறப்பித்துள்ளது. இந்த சட்டப்படி இ-சிகரெட்டை பயன்படுத்துவது, தயாரிப்பது, விற்பனை செய்வது, ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வது, விளம்பரம் செய்வது போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்படி இந்தத் தடையை முதல் முறையாக மீறுபவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றத்தைத் தொடர்ந்து செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இ-சிகரெட்டை பதுக்கி வைத்திருந்தாலே 6 மாதம் சிறை தண்டனை அல்லது 50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இ-சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தால் அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்யலாம். இதனால் இ-சிகரெட் இருப்பு வைத்திருப்பவர்கள், அது குறித்த விவரங்களை பட்டியலிட்டு அருகில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று இதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிகரெட்டுக்கு மாற்றாக இ-சிகரெட்டுகள் இருந்து வந்தன. சிகரெட் கம்பெனிகளை பாதுகாப்பதற்காக, அவசரச் சட்டம் மூலம் அராஜக நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்று இ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் மற்றும் வியாபாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாதுகாப்பான முறையில் இ-சிகரெட் பயன்படுத்தி வந்த 11 கோடி இந்தியர்களுக்கு இது கருப்பு நாள் என்று இ-சிகரெட் புகைப்பவர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு: கௌதம்