திருவலம் அருகே ஏரியில் கண்டெடுத்ததாக நாடகம்; ஐம்பொன் சிலையை கடத்தி விற்க முயன்ற வாலிபர் கைது: சிலையின் பாகங்களுடன் தப்பியவருக்கு வலை

திருவலம்: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த 55.புத்தூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் உள்ள ஒருவரது வீட்டில் பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை பதுக்கி வைத்திருப்பதாக காட்பாடி சிறப்பு தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை எஸ்ஐ ராஜசேகர் மற்றும் போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை நடத்தியதில் கூலி தொழிலாளியான பிரேம்குமார் (21) என்பவரது வீட்டில் ஐம்பொன் அம்மன் சிலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதில் ஒரு கை, ஒரு கால் உடைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பிரேம்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘அருகே உள்ள ஏரியில் மண்ணில் புதைந்த நிலையில் சிலை இருந்தது.

அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தேன். சிலையின் உடைந்த கை, கால் ஆகியவற்றை எனது தாய் மாமா குமார், அவரது சொந்த ஊரான விருதாச்சலத்துக்கு கொண்டு சென்றுள்ளார்’ என தெரிவித்தார். இதையடுத்து சிலையை பறிமுதல் செய்தானர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். விருதாசலத்துக்கு சென்ற குமாரை, செல்போனில் தொடர்பு கொண்டு சிலையின் கை, கால்கள் பாகங்களுடன் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சென்னை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் காவல் நிலையத்திற்கு வந்து ஐம்பொன் சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதில் சிலை 68 கிலோ இருப்பது தெரியவந்தது. மேலும் கை, கால் உடைத்து விருதாச்சலத்துக்கு கடத்தி செல்லப்பட்டதால், சிலையின் மொத்த எடை 70 கிலோவாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சிலை மண்ணில் புதைந்திருந்ததாக பிரேம்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான அடையாளங்கள் இல்லை. எனவே, சிலை கடத்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. கோயில்களில் காணாமல் போன சிலைகளுடன், மீட்கப்பட்ட சிலையும் ஒப்பிட்டு பார்க்கப்படும். சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய குமார் என்பவர், விருதாசலத்திற்கு சிலையின் கை, கால் பாகங்களை கடத்தி சென்றிருப்பதும் சிலையை விற்கும் முயற்சித்ததும் தெரிந்தது.

இதற்கிடையில் சிலை மீட்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் பின்னணியில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? சிலை எங்கிருந்து கடத்தப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது’ என்றனர். இந்நிலையில் இன்று காலை பிரேம்குமாரை காட்பாடி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி குடியாத்தம் கிளை சிறையிலடைத்தனர். சிலையின் கை, கால்கள் பாகங்களுடன் விருத்தாசலம் சென்றுள்ள குமார், வேலூர் வராததால், அவரை பிடிக்க போலீசார் விருத்தாசலம் செல்ல உள்ளனர்.

Related Stories: