திலீப் செல்போன்கள் கோர்ட்டில் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்: நடிகர் திலீப், அவரது தம்பி மற்றும் தங்கையின் கணவர் ஆகியோர் பயன்படுத்திய 6 செல்போன்களை 31ம் தேதி (நேற்று) காலை 10.15க்குள் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னுடைய செல்போன்களை மும்பையில் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றும் திலீப் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதற்கிடையே திலீப் மும்பைக்கு அனுப்பியிருந்த செல்போன்கள் நேற்று அதிகாலை கொச்சிக்கு வந்தது. இதையடுத்து அந்த போன்களும், அவரது தம்பி மற்றும் தங்கையின் கணவர் பயன்படுத்தியவை என மொத்தம் 6 செல்போன்களை சீல் வைத்த கவரில் தன்னுடைய வக்கீல் மூலம் நேற்று காலை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ள போன்களை உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து திலீப் தரப்பு வழக்கறிஞர், திலீபுடன் தொடர்புடைய அனைவரையும் குற்றவாளியாக்க முயற்சி நடக்கிறது. குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் நம்பிக்கையில்லை எனவே வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடக்கிறது. அதுவரை போன்களை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோபிநாத், முன்ஜாமீன் மனு விசாரணையை நாளைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.

Related Stories: