சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிறார் பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி: ஒன்றிய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள முனீஷ்வர்நாத் பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து நவம்பர் 22ல் அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள முனீஷ்வர்நாத் பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜீயம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. டிசம்பர் 14 மற்றும் ஜனவரி 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொலிஜீயம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் முனீஷ்வர்நாத் பண்டாரி எந்த நேரமும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த முனீஷ்வர்நாத் பண்டாரி?

முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 1983-ம் ஆண்டு, மே 29-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சிவில், சேவை, தொழிலாளர், குற்றவியல், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அரசமைப்பு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும், இவர் ராஜஸ்தான் அரசின் வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித்துறையின் வழக்கறிஞராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.

முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2007-ம் ஆண்டு, ஜூலை 5-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும். 2008-ம் ஆண்டு, நவம்பர் 4-ம் தேதி, நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய முனீஷ்வர்நாத் 2019-ம் ஆண்டு, மார்ச் 15-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ் ஓய்வுபெற்றதையடுத்து, 2021-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை முனீஷ்வர்நாத் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்புவகித்தார்.

Related Stories: