ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ஆசனூர் மலைப்பகுதியில்  இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய காட்டு யானைகள் அரேப்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்தன. அங்கு மாட்டு கொட்டாய் தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தின. மேலும் அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்து கரும்புகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. பின்னர் அதிகாலை நேரத்தில் விவசாய தோட்டத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டுயானைகள் கரும்பு பயிர்களை சேதப்படுத்தியதோடு ஊருக்குள் நடமாடியதால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

இது குறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானைகள் நடமாடிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் தாளவாடி அருகே உள்ள அருள்வாடி பகுதியில் 2 காட்டு யானைகள் நேற்று காலை விவசாய தோட்டங்களில் சுற்றித் திரிந்தன. அப்போது விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Related Stories: