விவசாயியிடம் ரூ.5.80 கோடி மோசடி:ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையை சேர்ந்தவர் செல்வமணி (53). இயற்கை விவசாயி. இவர் முன்பு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், செல்வமணிக்கு அவரது நண்பர் மூலம் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது கணேசன் தானும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார். இதற்கிடையே செல்வமணி தன்னுடைய ₹7 கோடியே 20 லட்சம் மதிப்பிலான இடத்தை கணேசனுக்கு விற்பதற்காக பேசியுள்ளார்.

இதற்கு ஒப்புக்கொண்ட கணேசன், ₹1 கோடியே 40 லட்சத்தை செல்வமணியிடம் கொடுத்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்தவுடன் பாக்கி தொகையை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் செல்வமணிக்கு சொந்தமான மற்ற இடங்களில் வீடு கட்டித்தருவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பத்திரப்பதிவு நடைபெற்று முடிந்தது. ஆனால் கணேசன் கூறியது போல் பாக்கி தொகையான ₹5 கோடியே 80 லட்சத்தை தரவும் இல்லை. வீடும் கட்டிக்கொடுக்கவில்லை. இதற்கு கொரோனா உள்ளிட்டவற்றை காரணம் காட்டியுள்ளார்.

இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு சென்னை கிளை வங்கியின் காசோலையை செல்வமணியிடம் கணேசன் கொடுத்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட அந்த வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வமணி இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். இந்த புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 4ம்தேதி அரியலூர் உழவர் சந்தை அருகே, கணேசன் மற்றும் அவரது சகோதரர்கள் ரமேஷ் (47), சங்கர் (50) ஆகியோர் சேர்ந்து, செல்வமணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த செல்வமணி, இதுகுறித்து அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கணேசன் மற்றும் அவரது சகோதரர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post விவசாயியிடம் ரூ.5.80 கோடி மோசடி:ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: