பெண் மைய சினிமா-ஃப்ரைடா காலோ எனும் அற்புத ஓவியர்

நன்றி குங்குமம் தோழி

மெக்சிகோவைச் சேர்ந்த உலகப்  புகழ்பெற்ற ஓவியர் ஃப்ரைடா காலோ. கடும் வலிகளுக்கு மத்தியில் அவர் எப்படி சிறந்த ஓவியராக தன்னை தகவமைத்தார் என்பதைப் பற்றிய ஆவணப்படம்தான் ‘The Life and Times of Frida Kahlo’. அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒன்றரை மணி நேரத்தில் நம்முன் காட்சி கோர்வைகளாக திறந்து காட்டுகிறது இந்தப் படம்.

மெக்சிகோவில் ஓர் அழகான வீடு. அம்மா, அப்பா, சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் ஃப்ரைடா. சின்ன வயதிலிருந்தே கம்யூனிச சித்தாந்தங்களில் பெரிய ஈடுபாட்டுடன் வளர்கிறாள். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஓவியங்களை வரைந்து தீர்க்கிறாள். ஓவியக் கலையில் ஈடுபடும் தருணங்களே அவள் வாழ்க்கையின், மகிழ்ச்சியின் அடிப்படையாக இருக்கிறது. அந்த ஊரிலேயே புகழ் வாய்ந்த ஓவியர் தியாகோ. பருமனான உடல்வாகைக் கொண்டவர். முதலாளித்துவத்திற்கு எதிரானவர்.  அவருக்கு  இரண்டு  மனைவிகள் இருந்தாலும் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார். தியாகோவின் ஓவியங்கள் மீதும், அவரின் மீதும் காதல் வசப்படுகிறாள் ஃப்ரைடா. இந்தச் சூழலில் ஃப்ரைடா பயணித்துக் கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளாகிறது.

விபத்தில் உடலின் எல்லா பாகங்களிலும் பலத்த அடிபடுகிறது. ஃப்ரைடா உயிர் பிழைப்பதே கேள்விக்குறியாகிறது. காலத்தின் கருணையால் உயிர் பிழைக்கிறாள். ஆனால், படுக்கையை விட்டு அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடிவதில்லை. ‘இனிமேல் ஃப்ரைடாவால் நடக்கவே முடியாது’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஏற்கனவே உடலால் நொடிந்து போயிருக்கும் ஃப்ரைடா மனதாலும் நிலைகுலைந்து போகிறாள். உடல் முழுவதும் காயங்களுடனும், மனம் முழுவதும் வலிகளுடனும் படுத்த படுக்கையில் இருந்தவாறே ஓவியம் வரைய ஆரம்பிக்கிறாள். அவளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை தந்தை செய்து தருகிறார்.

ஃப்ரைடா ஓர் ஓவியராக  மறுபடியும் பிறக்கிறாள். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அவளின் வலிகளும், காயங் களும்,  உணர்வுகளும் ஓவியங்களாக பரிணமிக்கின்றன.

கொஞ்ச நாட்களில் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க  ஆரம்பிக்கிறாள். அவள் நடப்பதை அவளாலேயே நம்ப முடிவதில்லை. மறுபடியும்  மகிழ்ச்சியின் அலை

அவளுக்குள் வீச ஆரம்பிக்கிறது. தன் ஓவியங்களை எடுத்துக்கொண்டு, கைத்தடியின் உதவியுடன் நடந்தே சென்று தியாகோவைச் சந்திக்கிறாள். தான் வரைந்த ஓவியங்களைப் பற்றிய அபிப்ராயங்களைக் கேட்கிறாள். ஃப்ரைடாவின் ஓவியங்களைக் காண்கின்ற தியாகோ ஆச்சர்யத்தில் அதிர்ந்து போகிறார். ‘என்னைவிட சிறப்பாக வரைகிறாய், தொடர்ந்து வரைந்து கொண்டேயிரு. விட்டுவிடாதே’ என்கிறார். ‘‘நான் வெளியே நடப்பதை வரைகிறேன். நீ உனக்குள் நிகழ்வதை, உன் இதயத்திலிருந்து வரைகிறாய்’ என்று பாராட்டுகிறார். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஃப்ரைடா வின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அப்பா மட்டுமே ஆதரவாக இருக் கிறார். தியாகோவும் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு ஃப்ரைடாவை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்கிறார். ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. ஃப்ரைடா கர்ப்பமடைகிறாள்.

ஆனால், அவளின் உடல் நிலை குழந்தைப்பேறுக்கு தயாராக இல்லை. மறுபடியும் உடல்ரீதியாக காயங்களும், வலிகளும் அவளை வாட்டி எடுக்கின்றன.

கரு கலைகிறது. இது அவளை இன்னும் துயருக்குள் தள்ளுகிறது அது மட்டுமல்ல, தியாகோ வேறு சில பெண்களுடன் தொடர்பு கொள்வது அவளை இன்னமும் பாதிக்கிறது. அவளின் எல்லாத் துயரங் களுக்கும் மருந்தாக இருப்பது ஓவியம் மட்டும் தான்.  ஃப்ரைடாவின் நாட்கள் முழுவதும் ஓவியங்கள் வரை வதிலேயே நகர்கிறது. இதற்கிடையில் அவளுடைய குடிப்பழக்கமும், புகைப் பழக்கமும் அதிகரிப்பதால், அவளின் சிறுநீரகமும், மற்ற  உடல்  உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. தியாகோவுடன் சமாதானமாகி பல இடங்களுக்குப் பயணம் செய்கிறாள். இந்தச் சூழலில் ஃப்ரைடாவின் அம்மா மரணம் அடைகிறார். அவளின் சகோதரி கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு, ஃப்ரைடாவுடனே தங்கு கிறாள். தன்னுடைய சகோதரிக்கும், தியாகோவுக்கும் இடையே ஏற்படும் தொடர்பை அறியும் ஃப்ரைடா மேலும் நிலைகுலைந்துபோய் தனியாக வாழ ஆரம்பிக்கிறாள்.

ஃப்ரைடா கட்டற்ற வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள். பல இடங்களுக்குச் செல்கிறாள். ஆண், பெண் பாகுபாடில்லாமல் எல்லோருடனும் உறவு கொள்கிறாள். அதிகமாக குடிக்கிறாள். ஆனால், எந்தச் சூழலிலும் ஓவியம் வரைவதை அவள் நிறுத்துவதே இல்லை. நாட்கள் நகர்கின்றன. ரஷ்யாவில் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சிந்தனை யாளர் டிராட்ஸ்கி மெக்சிகோவிற்கு வருகிறார்.  அவருக்கு  அடைக்கலம் தருகிறார் தியாகோ. இதற்காக ஃப்ரைடாவின் உதவியை நாடுகிறார். ஃப்ரைடாவின் ஓவியத்தைக் காண்கின்ற டிராட்ஸ்கி அவளை புகழ்கிறார். அவர் களுக்கிடையில் உருவாகும் தொடர்பை அறிகின்ற தியாகோ ஃப்ரைடாவை விவாகரத்து செய்கிறார். இந்தச் சூழலில் டிராட்ஸ்கி கொல்லப்படுகிறார். தியாகோ வின் மீது சந்தேகம் எழுகிறது. அவரை கண்டுபிடிக்க முடியாத தால் ஃப்ரைடாவை விசாரிக்கிறார்கள். தியாகோ கொலையாளி இல்லை என்பது தெரிய வருகிறது. ஃப்ரைடாவை தியாகோ மறுபடியும் திருமணம் செய்துகொள்கிறார். ஃப்ரைடாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. படுத்த படுக்கையாகவே கிடக்கிறாள்.

மெக்சிகோவில் அவளின் ஓவியங்கள் முதன் முதலாக காட்சிக்கு வைக்கப் படுகின்றன. அந்த நிகழ்வில் கலந்து கொள்ள பேரார்வம் கொள்கிறாள். ஆனால், மருத்துவர்கள் ஃப்ரைடாவை படுக்கையை விட்டு எழவே கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்கள். மரக்கட்டிலில் படுத்துக்கிடக்கும்  ஃப்ரைடாவை அப்படியே தூக்கிக்கொண்டு வண்டியில் ஏற்றி கண்காட்சிக்கு கொண்டு வருகிறார்கள். ஃப்ரைடாவின் ஓவியங்களை காண்கின்ற பார்வையாளர்கள் தங்களை மறந்து கண்ணீர் சிந்துகின்றனர். கவலைகளை மறக்கின்றனர். ஃப்ரைடாவை தலை சிறந்த ஓவியராக கொண்டாடுகின்றனர். அப்போது மெலிதாக இசை பரவ படம் முடிகிறது.

நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிற ஏதோவொரு கலை வடிவம் நம்முடன் இருந்தால் எவ்வளவு பெரிய வலியையும் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஃப்ரைடாவின் வாழ்க்கை  நமக்குத் தருகிறது. 47 வயதிலேயே மரணம் அடைந்துவிட்ட ஃப்ரைடாவின் வாழ்க்கைக்குள் சென்றுவந்த ஒரு பேரனுபவத்தை தரும் இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் எமி ஸ்டெச்லர்.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: