குண்டூரில் பரபரப்பு ஜின்னா டவரில் தேசியக்கொடியை ஏற்ற முயற்சி-இந்து அமைப்பினர் கைது

திருமலை : ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜின்னா டவர் அமைந்துள்ளது. இந்திய பிரிவினைக்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பெயரில் அமைந்திருக்கும் இந்த டவருக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜின்னா டவரில் தேசியக் கொடி ஏற்றுவோம் என இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து அந்த டவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்பு வேலியையும்  அமைத்திருந்தது. இதற்கிடையில் குடியரசு தினமான நேற்று முன்தினம் காலை, இந்து வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டவாறே திரளாக வந்து ஜின்னா டவர் மீது தேசியக் கொடியை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது அவர்களை தடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார்,  சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து பாஜக தேசிய செயலாளர் சுனில் தியோதர் கூறுகையில், ‘ஏற்கனவே ஜின்னா டவரின் பெயரை மாற்ற வேண்டும் என வைத்த கோரிக்கையை குண்டூர் மேயர் நிராகரித்தார். 1966ம் ஆண்டே ஹமித் மினார் என இதற்கு பெயர் மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது இந்து- முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் சின்னம்’ என தெரிவித்தார்.

Related Stories: