முல்லை பெரியாறில் நீர்வரத்தை கணக்கிட டெலி மெட்ரியை உடனே கேரளா பொருத்த வேண்டும்: ஒன்றிய அரசு நிலை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி:  முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய நீர் ஆணையத்தின் துணை இயக்குனர் நேற்று நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் அணையை பலப்படுத்த தமிழக அரசுக்கு நீர் வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். எந்த வகையிலும் கேரள அதிகாரிகள் தமிழக அரசை தொந்தரவு செய்யக்கூடாது. அணையை பலப்படுத்த, முல்லைப் பெரியாறின் துணை அணையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு கேரள அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மழை அளவை கணக்கிட முல்லைக்கொடி என்ற மழை அளவு கணக்கீட்டு கருவியை பொருத்தவிடாமல் தமிழக அதிகாரிகளை கேரள அரசு தடுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் மணிக்கு ஒருமுறை மழை மற்றும் நீர்வரத்தை கணக்கிட டெலி மெட்ரியை கேரள அரசு உடனடியாக பொருத்த வேண்டும். கடந்த முறை இந்த கருவியை பொருத்தாமல் இருந்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது என தமிழக அரசு குற்றம் சாட்டியிருந்தது. தற்போது வரையில் அணையின் ஒரு மதகில் சுமார் 1.6 லட்சம் கன அடி நீரை வெளியேற்ற திறன் கொண்டவையாக அணை உள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசு உண்மைக்கு புறம்பான விஷயத்தை தொடர்ந்து சொல்லி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: