கைவிடப்பட்டவர்களை காக்கும் சுரக்‌ஷா!

நன்றி குங்குமம் தோழி

காதலிச்சுட்டு ஏமாத்திட்டு போயிட்டான் இனி என்னை எப்படி வீட்டுல சேர்த்துப்பாங்க! நான் என்ன செய்றதுனே தெரியல? என ஏங்கி தவிக்கும் இளம்பெண்களுக்கு அடைக்கலம் தருகிறது சுரக்‌ஷா குடும்ப நல ஆலோசனை மையம். நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில இயங்கி வரும் இந்த அலுவலகத்தின் தங்கும் விடுதி தோட்டியோடு பகுதியில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஒரு மாதம் வரை தங்கலாம். இதேபோல் முறையற்ற கள்ளக்காதல் உறவால் பாதிக்கப்பட்ட பெண்கள், திருமணமாகி கைவிடப்பட்ட குழந்தைகளுடன் தவிக்கும் பெண்கள், முறை தவறிய தொடர்பால் வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள் என ஆதரவற்றநிலையில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் தருகிறது சுரக்‌ஷா எனப்படும் சுவேதார் கிரெக்.

இது ஒரு தன்னார்வ அமைப்பு. சுரக்‌ஷா குடும்ப நல ஆலோசனை மையத்தின் பொருளாளராக உள்ள அனிதா நடராஜன் இந்த அமைப்பின் செயல்பாடு குறித்து விவரித்தார். ‘‘1987ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் 33 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்த அமைப்பை டாக்டர் இந்திரா சுரேந்திரன் மற்றும் சாந்த அம்மா என அழைக்கப்படும் சாந்தா பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கினர். போலீசார், கலெக்டர், சமூக நல அலுவலரின் பரிந்துரையின் பேரில் கைவிடப்பட்டு நிர்கதியாக இருக்கும் பெண்களை சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு உணவு உடை உள்ளிட்டவற்றை வழங்கி ஆதரவளித்து வருகிறோம். இந்த விடுதியில் ஒருவர் அதிகபட்சம் 30 நாட்கள் தான் தங்க முடியும். தற்போது இங்கு 30 பேர் தங்கியுள்ளனர். 18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களுக்கு சேவை செய்ய 4 பணியாளர்கள் உள்ளனர்.

மத்திய அரசு எங்கள் நிறுவனத்துக்கு நிதியுதவி அளித்து ஊக்குவித்து வருவதால் எங்களால் பல்வேறு பணிகளை செய்ய முடிகிறது. இது தவிர படுகாணி, தச்சமலை, சிறுகடத்து காணி போன்ற 9 இடங்களில் வாழும் மலைவாழ் மக்களுக்கு வாரம் ஒருமுறை எங்களது மருத்துவர் குழு மருத்துவ சேவை அளித்து வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் சிகிச்சை அளித்து  வருகிறோம். இது தவிர ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மன நலம் சார்ந்த கவுன்சிலிங்கும் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் கணவனிடம் இருந்து பிரிந்த பெண்கள், காதலித்து ஏமாற்றப்பட்டதால் நிர்கதியாகி தவித்த இளம்பெண்களையும் அவர்களது வீட்டினருடன் பேசி குடும்பத்தில் சேர்த்து வைத்துள்ளோம். இங்கு தங்கியுள்ள பெண்கள் கைத்தொழில் மூலம் சம்பாதிக்கவும் கற்றுக்கொடுத்து வருகிறோம். கால் மிதிகள்( மேட்) தயாரித்து இங்குள்ள பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.

தற்போது கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் விதவிதமான முகக்கவசங்களையும் தைத்து விற்பனை செய்கிறார்கள் இங்குள்ள பெண்கள். இதன் மூலம் தினசரி 100 ரூபாய்வரை சம்பாதிக்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு திரும்பி செல்லும்போதோ குடும்பத்தினரோடு சேரும்போதோ இந்த கைத்தொழில் அவர்களது வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. எங்கள் தொண்டு நிறுவனத்தில் நடந்த ஒரு சம்பவம் கேட்போரை கண்கலங்க வைக்கும். அசாமை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் குலசேகரம் பகுதிக்கு வழிதவறி வந்துவிட்டார். அவர் அங்கிருந்த சில தவறான ஆண்கள் கையில் சிக்கி விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டார். அவர் எங்களை தொடர்பு கொண்டு உதவி கோரினார். இதனால் நாங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று அவரை மீட்டோம்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்த பெண்ணுக்கு அசாமி தவிர வேறு மொழி தெரியாது. அவரை மீட்டு விடுதியில் அடைக்கலம் கொடுத்தோம். பின் மத்திய அரசு உதவியுடன் அவரை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்து குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த சம்பவம் ஒருபோதும் மறக்க முடியாது’’ என்ற அனிதா நடராஜன் அனைத்து இந்திய பெண்கள் அமைப்பின் நிலைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: