கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் பித்தளை பாத்திரங்கள் மற்றும் குத்துவிளக்குகள் விலை ஏற்றமாக உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.300 அதிரடியாக உயர்ந்துள்ளதால் விற்பனை சரிந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பித்தளை குத்து விளக்குகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை உற்பத்திக்கு பெயர் பெற்றதாகும். இங்கு உற்பத்தி செய்யப்படு்ம் குத்துவிளக்குகள் மற்றும் பித்தளை பாத்திரங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை எதிர்வரும் 14ம் தேதி (வெள்ளிக்கி்ழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பகுதியில் பெண் குழந்தைகளுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வழங்குவார்கள். அந்த வகையில் இந்த சீர்வரிசை பொருட்களில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் பித்தளையாலான குத்துவிளக்குகள், பித்தளை பாத்திரங்களும் தவறாமல் இடம் பெறும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பித்தளையாலான குத்துவிளக்குகள், பொங்கல் பானை பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் பகுதிகளில் பொதுமக்கள் குவிய தொடங்கி உள்ளனர். அதற்காக இங்குள்ள பாத்திர கடைகளில் பாத்திரங்கள், குத்துவிளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பித்தளை பொருட்கள் தயார் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், உற்பத்தியாளர்களின் கூலி உயர்வாலும் பித்தளை பாத்திரங்கள் விலை முன்பு ஒரு கிலோ ரூ.400 விற்ற நிலையில், தற்போது ஒரு கிலோவிற்கு ரூ.700 என கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி ஏற்றத்தினால் விற்பனை மந்தமாகி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பித்தளை பாத்திர வியாபாரிகள் கூறுகின்றனர்.மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ள காரணத்தால் விடுமுறை நாட்களில் நடைபெறும் வியாபாரமும் முடங்கி உள்ளது. பல்வேறு காரணங்களால் பித்தளை குத்து விளக்குகள் மற்றும் பொங்கல் பித்தளை பாத்திரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கான வியாபாரம் முன்பைவிட விற்பனை மந்தமாகவே உள்ளன. இது வியாபாரிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.