கட்சியில் சேர்ந்த ஒரே நாளில் சீட் அதிமுக மாஜிக்களை வளைக்கும் சசிகலா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஐயப்பன். ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், கடந்த மாதம் அவருடன் திமுகவில் இணைந்தார். திமுக தலைமையிலான கூட்டணியில், உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய ஐயப்பன், நேற்று திடீரென சென்னைக்கு சென்று சசிகலாவை சந்தித்தார்.

பின்னர் உடனடியாக தன்னை சசிகலாவின் கட்சியான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைத்துக்கொண்டார். இதன் எதிரொலியாக சசிகலா வெளியிட்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் உசிலம்பட்டி தொகுதியின் வேட்பாளராக ஐயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்தவர் க.பாலமுருகன். டாக்டரான இவர் அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்.

இவர் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக அதிமுக தலைமை கழகத்தில் 2011, 2016 என இருமுறை விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதிமுக தலைமை தரப்பில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இந்த தேர்தலில் அவர் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் சென்னையில் சசிகலாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதன் பலனாக சோழவந்தான் தொகுதியின் அஇபுதமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு புதிதாக இணைந்த 2 பேரை, அதே நாளிலேயே வேட்பாளராக சசிகலா அறிவித்துள்ளதை பல்வேறு தரப்பிலும் டிரோல் செய்து வருகின்றனர்.

Related Stories: