அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதுடன், மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன் என தொடர்ந்து அடம்பிடித்த காரணத்தினால் தனிமைப்படுத்தப்பட்டார் சசிகலா. அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில், அவருக்கு ஆதரவாக இருந்தவர்களும் வெவ்வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமை காத்திருந்த சசிகலா, இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால், இத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனால் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதே நேரத்தில் பாமகவை உடைத்து கொண்டு வெளியே சென்ற அன்புமணி, தந்தை ராமதாசுக்கு எதிரானார். நானா? நீயா? என்ற மோதலில் அன்புமணிக்கு கட்சியின் சின்னம் கிடைத்துள்ளது. இதனால் அன்புமணி மீதும், அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி மீதும் ராமதாஸ் கடும் கோபத்தில் உள்ளார். அன்புமணி நிறுத்திய வேட்பாளர்களை தோல்வியை சந்திக்க வைத்தே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் டாக்டர் ராமதாசும், சசிகலாவும் கூட்டணி சேர்ந்து இத்தேர்தலை சந்திக்கின்றனர். அதிமுவில் தனக்கு எதிராக வேலை செய்தவர்களை தோல்வியடைய வைக்க வேண்டும் என்பதே சசிகலாவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. வடமாவட்டங்களில் ராமதாசும், தென் மாவட்டங்களில் சசிகலாவும் வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் இடைப்பாடி தொகுதியில் சசிகலா தரப்பில் போட்டியிட 10 பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல ராமதாஸ் தரப்பில் தொப்பாகவுண்டர், ஏழுமலை உள்பட 7 பேர் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளனர்.
இடைப்பாடி தொகுதியை பொருத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சி வலுவான நிலையில் இருக்கிறது. அக்கட்சி 3 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இவர்களின் ஆதரவுடன் தான் எடப்பாடி பழனிசாமி தெம்புடன் இருக்கிறார். தற்போது பாமக ரெண்டாக உடைந்துள்ள நிலையில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் சமநிலையில் பாமகவினர் இருக்கிறார்கள்.
இதனால் தற்போதைய வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக தனக்கு கிடைக்கும் வாக்குகளில் தொய்வு ஏற்பட்டுவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராமதாஸ் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்கள். இத்தொகுதிக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. எடப்பாடியை எதிர்த்து களம் இறங்குவது ராமதாஸ் தரப்பு வேட்பாளரா? அல்லது சசிகலா தரப்பு வேட்பாளரா என்பது விரைவில் தெரியும்.
