திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மை சமூகத்திற்கும், இலங்கை தமிழருக்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்து அது நிறைவேற துணைபோன கட்சிதான் அதிமுக. ஏன், இவர்களுடன் சேர்ந்து ‘பாட்டாளி’ அன்புமணி ராமதாசும் ஆதரவாக வாக்களித்து துரோகம் செய்தார்.
இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான அந்த சட்டமே மாநிலங்களவையில் நிறைவேறியது. அதைதொடர்ந்து, நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 70 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களின் இரத்தக்கறை இன்றைக்கு அதிமுக கையில்தான் இருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் பழனிசாமி என்ன பேசினார்? “குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே! எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார் என்று காட்டுங்கள்’’ என்று சொன்னவர்தான் பழனிசாமி.
ஆனால், சிறுபான்மையினர் வாக்குகள் வேண்டும் என்று, 2024 தேர்தலில் தனியாக நின்று நாடகம் ஆடியபோது, சிஏஏ சட்டத்தை கண்டிப்பதாக பல்டி அடித்தார் பழனிசாமி. “பாஜ மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள், சிஏஏ சட்டம் ஒரு வரலாற்று பிழை” என்று பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டார் பழனிசாமி. நான் இப்போது கேட்கிறேன், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, நீங்கள் இப்போது அந்த சட்டத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? தைரியம் இருந்தால், வெளிப்படையாக சொல்லுங்கள்.
பழனிசாமியின் துரோகப்பட்டியல் இதோடு நிற்கவில்லை. மூன்று வேளாண் சட்டங்களை பாஜ கொண்டு வந்தபோது கண்ணை மூடிக்கொண்டு அதையும் ஆதரித்தார் இந்த பழனிசாமி. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய எட்டு மாநில விவசாயிகளை, “புரோக்கர்கள்” என்று வசைபாடி கொச்சைப்படுத்தினார். இப்படி, பாஜவுடன் கூட்டணி சேர்ந்து, முழு சந்திரமுகியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி. அதாவது, முழு சங்கியாகவே மாறிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.
* பாஜவுடன் கூட்டணி சேர்ந்து, முழு சந்திரமுகியாகவே மாறியிருக்கிறார் பழனிசாமி. அதாவது, முழு சங்கியாகவே மாறிவிட்டார்.
* ‘மாப்பிள்ளை அவர்தான் ஆனா சட்டை என்னுது’ டெல்லிக்கு அடிக்கடி ஓடுவது குறித்து கலாய்‘‘ஊர் ஊராக சென்று, அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று பழனிசாமி சொல்லி கொண்டிருக்கிறார். பிரச்னை இல்லை என்றால், எதற்காக அத்தனை முறை டெல்லிக்கு சென்றீர்கள். டெல்லிக்கு சென்று அமித்ஷாவின் அப்பாய்ன்ட்-மெண்டுக்காக பலமணி நேரம் ஏன் காத்துக்கிடந்தீர்கள்? அதுவும் வேறு வேறு காரில் மாறி மாறி சென்று, முகத்தை எல்லாம் மூடிக்கொண்டு ஏன் வெளியில் வந்தார்? நான் கேட்கிறேன்…
கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்றுசொல்கிறார்கள். ஆனால், அனைத்து கட்சிகளும் ஏன் பாஜவிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? இது எப்படி தெரியுமா இருக்கிறது? “மாப்பிள்ளை அவர்தான், ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என்று நம்முடைய சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா படத்தில் வரும் காமெடி போன்று இருக்கிறது. நான் தெரியாமல்தான் கேட்கிறேன், கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்றால், அதில் இருக்கும் சிறிய கட்சிகள் எல்லாம் ஏன் அதிமுக சின்னத்தில் போட்டியிடாமல், பாஜவின் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்?
பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்று பிரதமர் மோடி அவர்கள் இதுவரை சொல்லி இருக்கிறாரா? அதிமுக என்ற பெயரை கூட அவர் சொன்னது போன்று எனக்கு தெரியவில்லை. என்டிஏ சர்க்கார், என்டிஏ சர்க்கார் என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்கிறார். ஆனால், நாம் “தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ, தமிழ்நாடு வெர்சஸ் டெல்லி” என்று சொன்னால் மட்டும், “இது என்ன டெல்லி தேர்தலா?” ஏன் அப்படி சொல்கிறீர்கள்?” என்று பெரிய அறிவுக்கொழுந்து மாதிரி கேட்கிறார் பழனிசாமி’’
