குஷ்புவை அக்கானு கூப்டுறதால விஜய்ய விமர்சிக்க மாட்டேன்: ஜகா வாங்கும் சுந்தர்.சி

பாஜ மாநில துணைத்தலைவரும், பிரபல நடிகை குஷ்பூவின் கணவரான, திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி, என்டிஏ கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி சார்பில், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: எனக்கு மதுரை மத்திய தொகுதி மக்கள் வெற்றியை தருவார்கள். நான் நிச்சயமாக வெற்றி செய்தியுடன் சென்னைக்கு திரும்பி வந்து, ஏசி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெறுவேன்.

நான் வெற்றி பெற்ற பின்பு, மாதம் 15 நாட்கள், எனது வாழ்க்கை மதுரையில் தான் இருக்கும். திரைப்பட துறையில் 30 ஆண்டுகள் நிறைவாக பணி செய்து முடித்துவிட்டேன். எனது அடுத்த கட்ட நகர்வு என்பது, தேர்தல் முடிவை பொருத்து இருக்கும். தவெக பொது கூட்டத்தில் பாட்டில் வீசியது கண்டிக்கத்தக்கது. இது அசிங்கமான செயல். அரசியலில் இப்படி நடப்பதை பார்த்து கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை பார்த்த பின்பு தான், என்னைப் போன்ற பொதுவானவர்கள், அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கம் ஏற்படுகிறது.

நாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. நடிகர் விஜய் என் மீது, மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர். நானும் அவரை அவ்வாறு தான் நினைக்கிறேன். எனது மனைவி குஷ்பூ, விஜய்யை, தனது சொந்த தம்பியாக நினைக்கிறார். விஜய்யும், குஷ்பூவை அக்கா என்று தான் அழைப்பார்.

அதனால் நான் விஜய் பற்றியோ, அல்லது அவரது கட்சி பற்றியோ, தவெக வேட்பாளர் பற்றியோ விமர்சிக்க தயாராக இல்லை. அதே நேரத்தில், மதுரை மத்திய தொகுதியை பொருத்தமட்டில், இரட்டை இலைக்கும், உதயசூரியன் சின்னத்துக்கும் இடையே தான் போட்டி. எனக்கு மதுரை மத்திய தொகுதியில் பிரசாரம் செய்ய நடிகை குஷ்பு கண்டிப்பாக வருவார். ஏனென்றால் நான் அவருக்கு ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளேன். அதனால் அவர் எனக்கு பிரசாரம் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘எய்ம்சை விரைவில் திறக்க வேண்டுமாம்’
மதுரை விமான நிலையத்தில் சுந்தர்.சி நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் மதுரையில் போட்டியிட காரணம், இங்குள்ள மக்களுக்கு நிறைய செய்ய வேண்டிது இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். அதேபோல் சாலை, மேம்பாலங்கள் உள்பட மதுரையின் வளர்ச்சிக்காகப் புதிய நீதிக்கட்சி இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நான் போட்டியிடும் தொகுதி குறித்த விபரங்களை தெரிந்து வைத்துள்ளேன். இங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உழைக்க வந்துள்ளேன்’ என்றார்.

Related Stories: