திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ₹1.50 கோடிக்கு பருத்தி ஏலம்-ஒரு மணிநேரத்தில் பணம் பட்டுவாடா செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ₹1.50 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. ஒருமணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சியில் வேளாண் உழவர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி ஏலம் விடப்படும். இந்த ஆண்டு பருத்தி ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாடப்பள்ளி உழவர் கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜன், செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஏலத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது, கோயமுத்தூர், திருப்பூர், சென்னிமலை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில், ஆர்.சி.எச்.எனப்படும் ரக பருத்தி ஒரு குவிண்டால் ₹15,700க்கும், டிசிஎச். எனப்படும் பருத்தி ₹10,700க்கும் ஏலம் போனது. நேற்று மட்டும் சுமார் 2500 மூட்டை பருத்தி ₹1.50 கோடிக்கு ஏலம் போனது. மேலும் ஏலம் விட்ட ஒரு மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜன் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு நல்ல விலையை நிர்ணயிக்க கூடிய வேளாண் கூட்டுறவு சங்கமாக மாடப்பள்ளி சங்கம் செயல்படுகிறது. கடந்த ஆண்டு 7வது நாள் தான் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஏலம் விட்ட ஒரு மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.

Related Stories: