3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கேரளாவில் மனைவிகளை கைமாற்றும் கும்பல்: சமூக வலைதளத்தில் நடந்த சீரழிவு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவிகளை கைமாற்றும் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலில் கேரளா முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண், சங்கனாச்சேரி போலீசில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றி கொள்ளும் கும்பல் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், கோட்டயம் கருகச்சால் என்ற இடத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த இவர்களிடம் நடத்திய தீவிர விசரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த கும்பல் மெசஞ்சர், டெலகிராம் ஆகிய சமூக இணையதளங்கள் மூலம் உறுப்பினர்களை சேர்க்கிறது. இதற்காக ‘கப்பிள் மீட் அப் கேரளா’ என்ற பெயரில் ஒரு குரூப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் கேரளா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இந்த குரூப் வழியாக ஒருவருக்கொருவர் அறிமுகமாகின்றனர்.

பின்னர், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து ஒருவருக்கொருவர் மனைவிகளை கைமாற்றி உல்லாச உறவில் ஈடுபடுகின்றனர். இதில், பணத்துக்காக மனைவியை கைமாற்றுபவர்களும் இருக்கின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவதாகவும், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் கூட இதில் உறுப்பினராக இருப்பதும் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கும்பலைச் சேர்ந்த 25 பேரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். பொதுவாக வெளிநாடுகளிலும், பெரிய நகரங்களிலும் மட்டுமே இது போன்று மனைவிகளை கைமாற்றும் கலாசாரம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கேரளாவிலும் இப்படி ஒரு கும்பல் செயல்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: