ஸ்ரீவைகுண்டம் அருகே சரள்மண் அள்ள குளத்து மடைகளை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்-விவசாயிகள் புகாரை அடுத்து தாசில்தார் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் :  ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்து மடைகளை உடைத்தும் தண்ணீரை வெளியேற்றியும் விதிமுறைகளை மீறி சரள் மண் அள்ளப்படுவதாக புகார் தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் குளத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.திருச்செந்தூரில் இருந்து நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வரை தொழில் வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி ஸ்ரீவைகுண்டம் யூனியன், ஸ்ரீமூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ புளியங்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் இருந்து சரள் மண்ணை தூர் வாருதல் என்ற பெயரில் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு வெளியே பொக்லைன் கொண்டு தோண்டி அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கூடுதலாக தண்ணீர் சேமிக்கும் வகையில் 2 அடிக்கு மிகாமல் சரள் மண் அள்ள அனுமதி பெற்றுக்கொண்டு 3 அடி முதல் 7 அடி வரை சட்ட விதிமுறைகளை மீறி சரள் மண் அள்ளப்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர்  அலுவலக துணை இயக்குநர்,ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், யூனியன் பிடிஓ உள்ளிட்ட  உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

 இதனால் ஆவேசமடைந்த பாசன விவசாயிகள், கீழ புளியங்குளம் குளத்தில் மண் அள்ளும் இடத்தை கடந்த 4ம் தேதி முற்றுகையிட்டனர். விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்ஐ வசந்தகுமார் மற்றும் போலீசார் சமரசப்படுத்தினர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. புகார் தொடர்பாக சரள்மண் அள்ளப்படும் இடத்தில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.

இதையடுத்து அவர், சம்பந்தப்பட்ட கீழ புளியங்குளம் கிராமத்தில் உள்ள குளத்தை நேற்று நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘திருச்செந்தூர்- அம்பாசமுத்திரம் தொழில் வழி சாலைப்பணிகளுக்காக சரள்மண் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்குளத்தில் விதிமுறைகளின் படி மணல் அள்ளப்பட்டு உள்ளதா என அளவீடு செய்யப்பட்டு வருகிறது. அளவீடு பணி முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: