புதிதாக திறக்கப்பட்டுள்ள வேளச்சேரி பாலத்தில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்: சட்டப்பேரவையில் அசன் மவுலானா எம்எல்ஏ பேச்சு

சென்னை: புதிதாக திறக்கப்பட்டுள்ள வேளச்சேரி பாலத்தில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அசன் மவுலானா எம்எல்ஏ பேசினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ அசன் மவுலானா(காங்கிரஸ்) துணை கேள்வி எழுப்பி பேசுகையில், ‘‘ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் வேளச்சேரி பாலத்தை கட்டி முடித்து, அதில் ஒரு பாகத்தை திறந்து தந்த முதல்வருக்கும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வேளச்சேரி பாலத்தின் ஒரு பாகம் திறக்கப்பட்டுள்ளது. அது ஒன்வே-வாக இருக்கிறது. பாலத்தில் டிராபிக்கே இல்லாத அளவில் உள்ளது. அதனை இருவழி பாலமாக ஆக்கித்தர வேண்டும். அதே போல தரமணி சந்திப்பில் இருந்து அடையாறு வழியாக திருவான்மியூர் வரை செல்லும் ஒரு பாலம் வருகிறது. அந்த பாலத்தில் அடையாறு சந்திப்பில் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த சந்திப்பில், பாலத்தை இணைக்கும் இன்னொரு பாலம் வர வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘உறுப்பினரின் கோரிக்கைகளை ஆய்வு மேற்கொண்டு, சாத்தியக்கூறுகள் ஏற்படும் என்று சொன்னால், அது கட்டாயம் நடைபெறும்’’ என்றார்.

Related Stories: