இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டும் ஒமிக்ரான் பாதித்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ‘‘சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும்  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கோவிட் தொற்றின் இரண்டாவது அலையின்போது முதல்வர், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா ஆகிய மருத்துவ முறைகளை பின்பற்றி கோவிட் தொற்று சிகிச்சை அளிக்க கோவிட் பாதுகாப்பு மையங்களை அமைக்க ஆலோசனை வழங்கினார். தற்சமயம் தொற்று அதிகரித்துள்ள  நிலையில்  மாநிலத்திலேயே முதல் சித்த மருத்துவ கோவிட் சிகிச்சை மையம் பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 41 படுக்கை வசதிகளுடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பாதித்த நபர்கள் இல்லங்களிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று கொள்ளலாம். இவர்களுக்கு 5 நாட்களுக்கு பிறகு ஆர்.டி.பி.சி.ஆர்(RT-PCR) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் தங்களின் இயல்பான பணியினை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் எழும்பூர் எம்எல்ஏ இ.பரந்தாமன், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவ துறை இயக்குநர் கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

* அம்மா மினி கிளினிக்கால் எந்த பயனும் இல்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அளித்த பேட்டியில், ‘‘கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்  1 வருட காலத்திற்கு தற்காலிகமாக மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கும் போதே 1820 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். எந்த கிளினிக்கிற்கும் செவிலியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. இத்திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட  அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது. எனினும், அம்மா மினி கிளினிக் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் கோவிட் பணிகளில்  பயன்படுத்தப்படுவார்கள்’’ என்றார்.

Related Stories: