மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா ஆஞ்சநேயருக்கு வடைமாலை, தங்கக்கவசம் சாத்துப்படி- திரளான பக்தர்கள் தரிசனம்

சேலம் : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சேலத்தில் உள்ள பல்வேறு கோயில்களில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. சேலம் கோட்டை பெருமாள் கோயில் ஆஞ்சநேயருக்கு அதிகாலையில் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், ஆஞ்சநேயருக்கு 1,008 வடமாலை சாத்தப்பட்டது. மேலும், அழகிரிநாதர் மற்றும் சுந்தரவல்லி தாயாருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அனுமனை வழிபட்டனர். பக்தர்களுக்கு துளசி, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல், கோரிமேட்டில் உள்ள வீரபத்திர சவுபாக்கிய ஆஞ்சநேயர் கோயில், தங்ககவசம் சாத்துப்படி நடந்தது. மேலும், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோயில், பட்டைக்கோயில் வரசக்தி ஆஞ்சநேயர் கோயில், பால்மார்கெட் லட்சுமி நாராயண சுவாமி கோயில், ஜங்சன் தர்மன் நகர் பக்த வரபிரசாத ஆஞ்சநேயர் கோயில், உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்நேயர், சின்னதிருப்பதியில் உள்ள வடக்கு முக வீர ஆஞ்சநேயர் உள்பட பல்வேறு கோயில்களில் தங்க கவசம், வெள்ளி கவசம் மற்றும் வடமாலை உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆட்டையாம்பட்டி: சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில், காளிப்பட்டி கந்தசாமி கோயிலின் பின்புறமுள்ள சென்றாய பெருமாள் கோயில் வளாகத்தில், வீரபக்த ஆஞ்சநேயருக்கு நேற்று விடியற்காலை பால், தயிர், பன்னீர், மோர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து வெற்றிலை மாலை, வடைமாலை, எலுமிச்சை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் திருவீதி உலா நடைபெற்றது.

இடைப்பாடி: இடைப்பாடியில் மூக்கரை நரசிம்ம பெருமாள் கோயில், வெள்ளூற்று பெருமாள் கோயில், வீரப்பம்பாளையம் திம்மராய பெருமாள் கோயில், பூலாம்பட்டி மாட்டுக்கார பெருமாள் கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

இளம்பிள்ளை: இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டியில், சஞ்சீவிராய பெருமாள் கோயில் வளாகத்தில் 42 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு வடைமாலை, வெற்றிலை மாலை, செங்கரும்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தாரமங்கலம்: தாரமங்கலம் பஸ்நிலையம் அருகே உள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றிலை மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Related Stories: