மார்ச் 8ம்... மகளிர் தினமும்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் செய்த புரட்சியின் குறியீடு… மாபெரும் போராட்டத்திற்கான வெற்றி நாள்…

உண்ண உணவின்றி..  உடுக்க தரமான உடையின்றி..  வீதிக்கு வந்துப் போராடி.. ரத்தம் சிந்திய வீராங்கனைகளின் உணர்வு வரலாறு. ஆயிரமாயிரம் பெண்கள், தங்களது அடிப்படை உரிமைகளைப் பெற போராடிய வரலாறு. உலகெங்கும் நிகழ்ந்த தொழில் புரட்சி பெரிய பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே கூரையின் கீழ் பணிபுரியும் சூழல் வர, புதிய புதிய நகரங்கள் தோன்றின.  ஆண்களோடு பெண்களும் தொழிற்சாலைகளில் பணிபுரிய வந்தனர். பெண்கள் ஆண்களைவிடவும் அதிக உழைப்பைத் தந்தாலும், ஆண்களுக்குத் தருவதைப் போன்ற ஊதியம் தரப்படவில்லை. சம உரிமையை போராடித்தான் பெற்றாக வேண்டும் என்பது பெண்களுக்குப் புரியத் தொடங்கியது.  இந்நிலையில் நியூயார்க் நகரின் ஆயத்த ஆடை தொழிற்சாலை மற்றும் ஜவுளித் தொழிற்சாலையைச் சார்ந்த பெண்களுக்கு, நாள்தோறும் 15 மணி நேர வேலை.

வேலை செய்த பொருளுக்கு மட்டுமே கூலி.  ஊசி, நூல், மின்சாரம், வேலைக்குப் பயன்படுத்தும் நாற்காலி மற்றும் கைப் பெட்டிக்கும் தொழிலாளர்களே பணம் கட்ட வேண்டிய பரிதாப நிலை இருந்தது. வேலைக்குத் தாமதமாக வந்தால் அபராதம். கழிவறையில் சற்று அதிக நேரம் இருந்தாலும் அபராதம் என்ற நிலை இருந்தது. பெண் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகவும், பசி, பட்டினி, ஓய்வின்மை, வாக்குரிமை, கூலி உயர்வு, எட்டு மணி நேர வேலை, வேலை நிரந்தரம், பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை, ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும்  என பல கோரிக்கைகளை வலியுறுத்தி வீதியில் இறங்கி போர்க் குணமுள்ள ஓர் ஆர்ப்பாட்டத்தை தன்னெழுச்சியோடு நடத்தினர்.

நடத்திய நாள் மார்ச் 8.  போராட்டத்தின் இறுதியாய் கிடைத்த வெற்றியே உலக மகளிர் தினம். பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்காக உலகம் முழுவதுக்குமான ஒரு நாளை மகளிர் நாளாகக் கொண்டாட வேண்டுமென்ற கருத்தை ஜெர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ‘கிளாரா ஜெட்கின்’ முதன் முதலில் தெரிவித்ததோடு, உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த நாளான மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடும் யோசனையையும் முன்வைத்தார். அந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து கலந்து கொண்ட அனைவரும் திட்டத்தை வரவேற்றனர். மார்ச் 8 உலக மகளிர் தினமாக உருவானது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: