ஆற்காடு அருகே கடந்த 2 நாட்களில் கோமாரி நோய் தாக்கி 70 கால்நடைகள் பலி : கிராம மக்கள் வேதனை

ஆற்காடு: ஆற்காடு அருகே கடந்த 2 நாட்களில் கோமாரி நோய் தாக்கி 70க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியானது. இதனால் கிராம மக்கள் வேதனையடைந்தனர்.  ஆற்காடு அடுத்த திமிரி அருகே தாமரைப்பாக்கம், வணக்கம்பாடி, மோசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மட்டும் கடந்த 2 நாட்களில் 30 ஆடுகள், 20 ஆட்டுக்குட்டிகள், 10 பசுக்கள், 10க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் கோமாரி நோயால் பாதித்து அடுத்தடுத்து இறந்தது. மேலும், 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் வேதனை அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘கோமாரி நோயால் பெரும்பாலான கால்நடைகள் உடல்நலம் குன்றி சோர்ந்து கிடக்கிறது. அவற்றில் சில கால்நடைகள் இறந்து விடுகிறது.

மேலும், மழைக்காலங்களில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெறும். ஆனால் இம்முறை தாமதமாக நடக்கிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் முகாம்களை விரைந்து நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எங்களில் பலருக்கு கால்நடை வளர்ப்புதான் பிரதான தொழிலாக உள்ளது’ என்றனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர்களிடம் கூறுகையில்,  ‘கலெக்டர் உத்தரவின்பேரில் ஆற்காடு பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும். அனைத்து கால்நடைகளையும் பரிசோதனை செய்து கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். நோய் தாக்கிய பசுவின் பாலினை, அதன் கன்று குட்டிகள் குடித்ததால் அவையும் இறந்துள்ளது’ என்றனர்.

மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டை பகுதியில் நடந்த கிராம சபா கூட்டத்தின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கோமாரி நோய் பாதிப்பால் கால்நடைகள் பாதிப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக கால்நடை மருத்துவக்குழுவினரை கலெக்டர் வரவழைத்து முகாம் நடத்தி அப்பகுதியில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: