காதலர் தின ஸ்பெஷல் துணுக்குகள்

நன்றி குங்குமம் தோழி

இத்தாலி நாட்டிலுள்ள ரோபக்டோ என்பவர் அலெக்ஸாண்ட்ரா என்னும் பெண்ணை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப்போகும் வேளையில் அலெக்ஸாண்ட்ராவுக்கு ரோபக்டோ மீது திடீரென்று கோபம் ஏற்பட நிச்சயதார்த்தம் தடைபட்டது. அன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருநாள்கூட தவறாமல் ரோஜா மலரை 1480 நாட்களுக்கு அனுப்பினார் ரோபக்டோ. அப்படியிருந்தும் அலெக்ஸாண்ட்ராவின் கோபம் தணியவே இல்லையாம். இதனை அறிந்த ரோபக்டோ இத்தாலியின் பிரதான நகரமான கின்னெட் வால் நகரின் மையப்பகுதியில் தனது காதலி அலெக்ஸாண்ட்ராவுக்காக 80 அடி இதய வடிவிலான காதல் சிற்பத்தை பளிங்கு கற்களால் அமைத்து இருக்கிறார். இத்தாலிக்கு வருகிற வெளிநாட்டு விருந்தினர்களை இன்றும் கவரும் அந்த காதல் சின்னம் 200 ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பப்பட்டது.

 

பாரதியார் எப்போதும் தன் மனைவி செல்லம்மாளுக்கு கடிதம் எழுதும்போது ‘எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம்’ என்று ஆரம்பித்து உனதன்பன் என்று முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பால்ய விவாகம் நடைபெற்ற காலம் அது. அக்காலத்தில் திருமணம் முடிந்தவுடன் கணவன்-மனைவி இருவரும் பேசுவதே அபூர்வமாக இருந்தது. கணவனைக் கண்டவுடன் மனைவி ஓடி ஒளிந்து கொள்வார். இந்தக் காலகட்டத்தில் ஒருவர் மட்டும் வித்தியாசமாக நடந்துகொண்டார். திருமணம் முடிந்த உடனே மணவிழாவில் கலந்துகொண்ட எல்லார் முன்னிலையில் மணமகன்,மணமகளை நோக்கி,

‘தேடிக் கிடைக்காத சொர்ணமே

உயிர் சித்திரமே மட அன்னமே

கட்டியணைத் தொரு முத்தமே - தந்தால்

கை தொழுவேன் உனை நித்தமே!’

- என்று காதல் பாட்டுப் பாடினார்.

மணமகளுக்கு  நாணத்தால் முகம் சிவந்தது. அப்போது மணமகனுக்கு வயது 14. மணமகளுக்கு வயது 7. அந்த மணமக்கள் யார் தெரியுமா? புரட்சிக்கவி பாரதியார் - செல்லம்மாள். ரோமானிய மக்களின் காதல் தெய்வமான வீனஸ் ரோஜா மலரைத்தான் சூடியிருப்பார். ஸ்காண்டி நேவியா நாட்டின் காதல் தேவதை ‘கல்டா’ தெய்வமும் ரோஜா மலரை தலையில் சூடியிருப்பார். பண்டைக்காலத்தில் இருந்தே தென் ஐரோப்பாவில் ‘ரோஜா விழா’ என்று ஒரு திருவிழா நடக்கும். காதலர் தினத்தை முன்னிட்டு நடக்கும் இவ்வினிய விழாவில் இளைஞர்கள் தங்கள் காதலியை தேர்ந்தெடுக்கின்றனர்.

 

சைபீரியா நாட்டில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் எவருக்கேனும் காதல் ஏற்பட்டு விட்டது என்றால் உடனே அவர் ஐஸ்கட்டிகளைக் குஷியுடன் தம்மேல் வீசிக்கொள்வார். குறிப்பிட்ட பெண் இந்தக் காட்சியை பார்த்து அவர் தன்னைக் காதலிக்கிறார் என்று புரிந்துகொள்வாள். அவளுக்கும் அவரைப்பிடித்துவிட்டது என்றால் அவள் ஐஸ்கட்டிகளை எடுத்து அவர் மீது வீசுவாள். இதற்கு நானும் உன்னைக் காதலிக்கிறேன் (Lalso Love you) என்று ெபாருள். காதல் தேவதை வீனஸ் சின்னம் ஸ்ட்ராபெர்ரி பழம் போன்று இருப்பதால் மேலை நாடுகளில் ஸ்ட்ராபெர்ரியை காதல் பழம் என்கின்றனர். இப்பழத்தின் வடிவம் காதல் சின்னமான இதய வடிவத்தில் இருப்பதாலும் வீனஸ் தேவதையை குறிக்கும் அடையாளமாக ஸ்ட்ராபெர்ரியை அங்கு கருதுகின்றனர்.

 

ஜப்பானில்  ஐ லவ்யூவை எப்படி சொல்வார்கள் தெரியுமா? சுகி தேசு. மாவீரன் நெப்போலியன் தன் காதலி ஜோசப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப்புகழ் பெற்றவை. திருமணத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த நெப்போலியன் திருமணம் முடிந்து முப்பத்தெட்டு மணி நேரம் மட்டுமே மனைவியுடன் இருந்துவிட்டு போர் முனைக்கு சென்று விட்டார். போர் முனையிலிருந்து நெப்போலியன் தன் காதலிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றல்ல... இரண்டல்ல ஐயாயிரமாகும். காதல் ஆப்பிள் என்று ஒரு பழத்தை குறிப்பிடுகின்றனர். அது என்ன தெரியுமா? தக்காளி பழத்துக்குத்தான் காதல் ஆப்பிள் என்று பெயர். காதலன் ஏமாற்றினால்  காதலி வழக்குத் தொடர்ந்து நஷ்டஈடு வாங்கிக்கொள்ளலாம். இதற்கான சட்டம் இங்கிலாந்தில் 1920ல் நிறைவேறியிருக்கிறது.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Related Stories: