அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம், வீடுகள் அதிரடி அகற்றம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் ஊராட்சி கிராமத்தின் மயானத்துக்கு செல்லும் பாதையையும், அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து தேவாலயம் மற்றும் வீடு கட்டப்பட்டு இருப்பதாக அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தனர். அதில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து, தேவாலாயம் மற்றும் வீடுகள் கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் குடியிருப்புகளையும் 4 வாரத்துக்கு அகற்ற வேண்டும் என கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் நேற்று காலை மேற்கண்ட பகுதிக்கு சென்றனர். அங்கு, ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த தேவாலயம், வீடுகளை 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அக்கிராமிப்பாளர்கள் சிலர், கிறிஸ்துமஸ் பண்டிகை வரை தேவாலயத்தை இடிக்க வேண்டாம் என அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, நீதிமன்ற உத்தரவின்படி தேவாலயத்தை இடித்து அகற்ற வேண்டி உள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் சமரசம் பேசினார். பின்னர், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கூடுவாஞ்சேரி: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான சுமார் 110 ஏக்கர் நிலத்தை, கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கைப்பற்றியது. அதனை சிஎம்டிஏ நிர்வாகத்திடம் ஒப்படைத்து, சென்னை புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. இதற்கிடையில், புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலையத்தின் நுழைவாயிலில் குழந்தை இயேசுவுடன் மாதா சிலை இருந்தது. இச்சிலையால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து சிலையை அகற்ற வருவாய் துறையினர் முடிவு செய்தனர்.

இதைதொடர்ந்து, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய் துறையினர், நேற்று 3 பொக்லைன் இயந்திரங்களுடன் அப்பகுதிக்கு சென்றனர். இதை அறிந்ததும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, குழந்தை ஏசு சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம், தாசில்தார் சமரசம் பேசினார். அப்போது, அதே பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள வேறு ஒரு இடத்தில் மாதா சிலையை அமைப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து குழந்தை இயேசுவுடன் இருந்த மாதா சிலையை அகற்றி, தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அங்கிருந்த கட்டிடத்தை அகற்றினர்.

Related Stories: