பல்வேறு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: வரும் 15ம்தேதி மெயின் தேர்வு

சென்னை: பல்வேறு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. வருகிற 15ம் தேதி மெயின் தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) கடந்த 8ம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப் 2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு தமிழ் தகுதித் தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது.

காலையில் நடைபெற இருந்த தேர்வை 9233 பேரும், பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வை 9244 பேரும் எழுத இருந்தனர். தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்வர்களுக்கான அறை ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை என்று பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்தது. மற்றொரு தேதியில் அந்த தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட பிரியா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வின் முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2ஏ பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-2 பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு (கொள்குறி வகை) தேர்வு வரும் 15ம் தேதி முற்பகலில் நடக்கிறது. அன்றைய தினம் பிற்பகலில் குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தாள்-1 தமிழ் தகுதித் தேர்வானது பிற்பகலில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவுத் தளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: