இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம் காரணமாக சென்னையில் 36 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி

சென்னை: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலுக்கு, அமெரிக்காவின் ஏவுதளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பாதையை மூடிவிட்டன. எனவே, மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்கள், 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று 3வது நாளாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வளைகுடா ஐக்கிய அரபுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்தானது. சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், விமானங்கள் ரத்து எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ஈரான், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகளை கடந்து வரவேண்டிய நிலையில் உள்ளன.

ஈரான் உள்ளிட்ட நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால் அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம் அல்லது விமானம் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: