மதுரை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். கொத்தனார். இவரது மகள் துர்காதேவி (17) மதுரை தெப்பகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்தவர், தேர்வு விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தார். தேர்வு எழுதுவதற்காக உறவினர் அஜித்குமாருடன், ஆவியூரில் இருந்து டூவீலரில் மதுரைக்கு நேற்று காலை வந்து கொண்டிருந்தார்.
வலையங்குளம் பகுதியில் வந்தபோது, அல்லிகுளம் பகுதியில் இருந்து பெரியார் பஸ் நிலையம் நோக்கி சென்ற அரசு டவுன்பஸ், டூவீலர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டதில் மாணவி துர்காதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெருங்குடி போலீசார், படுகாயமடைந்த அஜித்குமாரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிளஸ் 2 தேர்வெழுதச் சென்ற மாணவி, பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
