பொன்முடி வழக்கு; ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு: விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு

விழுப்புரம்: பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக விதிகளை மீறி செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.28,36,40,600 இழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ, அவரது மகன் கௌதமசிகாமணி மற்றும் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012ல் அப்போதைய அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 57 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாணை முடிந்துள்ள நிலையில் அதில் 30 பேர் பிறழ்சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேர் ஆஜராகவில்லை. தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் சாட்சிகள், ஆவணங்கள் குறித்து தெரிவித்த வாதத்திற்கு பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்களும் பதில் வாதம் செய்தனர். இதையடுத்து நீதிபதி மணிமொழி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ளதால் இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Related Stories: