போரால் ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்கள்: மீட்டு வரக்கோரி கலெக்டரிடம் குடும்பத்தினர் கண்ணீர் மனு

நாகர்கோவில்: ஈரானில் போர் காரணமாக, அங்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களைப் பாதுகாப்பாக தாயகம் மீட்கக் கோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று கலெக்டரிடம் உருக்கமான மனு ஒன்றை அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலந்துறை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள், வாழ்வாதாரத்திற்காக ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்றிருந்தனர். தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழல் மற்றும் பதற்றமான நிலை காரணமாக, அவர்கள் கரைக்குத் திரும்ப முடியாமல் நடுக்கடலிலேயே தவித்து வருகின்றனர். இது குறித்து மீனவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு போன் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர். அதில், ‘தற்போது உயிருக்கு பயந்த நிலையில் கடலில் தங்கியுள்ளோம். எங்களிடம் இருக்கும் உணவு மற்றும் குடிநீர் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் மிகுந்த மன அழுத்தத்திலும், மரண பயத்திலும் இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
ஈரானில் சிக்கியுள்ள எங்கள் மீனவர்களின் உயிருக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். உடனடி நடவடிக்கையாக அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், போர் பதற்றம் அதிகரிப்பதற்கு முன்பாக, எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மீனவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையிலும் மனவேதனையிலும் ஆழ்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராமத்தின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: