சென்னை: சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி பாரம்பரிய கட்டிடத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் நேற்று முதல் வழக்குகள் விசாரணை தொடங்கியது. சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி 133 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே கல்லூரி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு சட்ட மாணவர்கள் மோதல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது.
இதையடுத்து சட்ட மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி சண்முகம் தலைமையிலான ஆணையம், தற்போது உள்ள இடத்தில் சட்ட கல்லூரியை மூடிவிட்டு புதிய இடத்திற்கு கல்லூரியை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு 118 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் ஒரு சட்டக் கல்லூரியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் மற்றொரு சட்டக் கல்லூரியும் கட்டியுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இடநெருக்கடி அதிகரித்து வந்த காரணத்தாலும் புதிய நீதிமன்றங்களின் தேவை ஏற்பட்டதாலும் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்த புராதன கட்டிடத்தில் உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிமன்ற அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 23 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 6 நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்ற அறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் இந்த நீதிமன்ற அறைகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முதல் அமர்வில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழக்குகளை விசாரித்தனர். மற்ற 5 அறைகளிலும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டன. இந்த நீதிமன்ற அறைகளில் இறுதி விசாரணைக்கு காத்திருக்கும் பழைய ரிட், சிவில், கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது.
