பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்..நெல்லையில் 1500 கடைகள் அடைப்பு..!!

நெல்லை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மேலப்பாளையம் பகுதி முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பாபர் மசூதி எழும் வரை போராட்டம் ஓயாது என்று முழக்கமிட்டனர். கோவையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் துறையினரிடம் பரிசு பெட்டி கொடுத்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வந்த பரிசு பெட்டியால் சந்தேகமடைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்த போது அதில் உலர் பழங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Related Stories: