12 எம்பி.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய முடியாது அவையின் கண்ணியத்தை மீறியது ஜனநாயக விரோதம் இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு வெங்கையா கேள்வி

புதுடெல்லி: ‘மாநிலங்களவையில் ஜனநாயகத்தை மீறி செயல்பட்ட 12 எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறுவதை ஏற்க முடியாது,’ என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. அப்போது, மாநிலங்களவையில் மரபுகளை மீறி நடந்ததாக காங்கிரஸ் (6), திரிணாமுல், சிவசேனா (தலா 2), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் என்று மொத்தம் 12 எம்பி.க்களை அவை தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்தார்.

இதை ரத்து செய்யும்படியும், இந்த தண்டனை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் எதிர்க்கட்சிகள் அவைக்கு உள்ளேயும், வெளிேயயும் போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை அருகே எதிர்க்கட்சிகள் நேற்றும் போராட்டம் நடத்தின. இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று காலை மாநிலங்களவை கூடியதும், பட்டியலிடப்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் 50 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் பேசிய வெங்கையா நாயுடு, ‘12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று சில உறுப்பினர்கள் கூறுகின்றனர். மாநிலங்களவை வரலாற்றில் 1962 முதல் 2010 வரை உறுப்பினர்கள் 11 முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை விதி 256ன் கீழ், சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்து கொண்டதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தங்கள் நடத்தைக்கு இதுவரை அவர்கள் வருத்தம் தெரிவிக்கவே இல்லை. கார்கேவின் முறையீட்டை மட்டும் வைத்துக் கொண்டு சஸ்பெண்ட் உத்தரவை பரிசீலிக்க தயாராக இல்லை,’ என்று கூறினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பேச அனுமதிக்குமாறு வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி,க்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு வெங்கையா நாயுடு ஒப்புக் கொள்ளவில்ைல. இதை கண்டித்து மையப்பகுதிக்கு வந்து எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அவையை வெங்கையா ஒத்திவைத்தார்.

* டிஆர்எஸ் எம்பி.க்கள் அமளி

மக்களவையில் நேற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்பி.க்கள் அவையின் மையப் பகுதியில் குவிந்து, ‘வேளாண் சட்ட போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்று கோஷமிட்டனர். டிஆர்எஸ் தலைவர் நம நாகேஸ்வர ராவ் பேசுகையில், ‘நாட்டிலேயே நெல் விளைச்சல் அதிகம் கொண்டது தெலங்கானா. ஆனால், ஒன்றிய அரசு எங்களிடம் நெல் கொள்முதல் செய்வதில்லை,’ என்றார். இதற்கு ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளிக்காததால் பதாகைகளையும், காகிதங்களையும் கிழித்து வீசிவிட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக எம்பி.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories:

More