தடுப்பூசிக்கு அடங்குமா ஒமிக்ரான்: பத்தே நாட்களில் 29 நாடுகளுக்கு தாவல்; இளம் வயதினரை மட்டும் அல்ல; முதியோரையும் பதம் பார்க்கிறது

புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை, 2வது அலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு, பொருளாதார நிலை சீரடைந்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகளை அச்சமூட்டும் வகையில், 50 பிறழ்வுகளை கொண்ட ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ்  தென்ஆப்ரிக்காவில் முதலில் கடந்த மாதம் 24ம் தேதி கண்டறியப்பட்டது. தற்போது, இது அதிக வேகமாக 29 நாடுகளில் பரவியுள்ளது.

மேலும், தென் ஆப்ரிக்காவிலேயே ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இரட்டிப்பு அடைந்துள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. ‘தென் ஆப்ரிக்காவில் முதலில் இளம் வயதினரிடம் மட்டுமே காணப்பட்ட இது, தற்போது முதியவர்களையும் தாக்க தொடங்கி இருக்கிறது. ஆனால், இதுவரையில் ஒரு பலி கூட இதனால் ஏற்படவில்லை என்பதால், இதன் வீரியம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியவில்லை. இதன் முழு சுயரூபமும் டிசம்பர் இறுதியில்தான் தெளிவாக தெரியும்.

அதுவரையில் அதன் பாதிப்புகள், அறிகுறிகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதுள்ள தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ்கள் ஒமிக்ரானின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும்,’ என்று வைரஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ‘ஒமிக்ரான் வைரசால் மோசமானவற்றுக்கு தயாராகுங்கள், சிறந்ததை நம்புங்கள். விஞ்ஞானிகள் கூறியது போன்று முழு தடுப்பூசி, ஒரு பூஸ்டர் டோஸ் சாத்தியமான பாதுகாப்பை வழங்கும்,’ என கூறியுள்ளார்.

* கடந்த 10 நாட்களில் 29 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது.

* இதன் பரவலை தடுக்க, இதுவரை 56 நாடுகள் விமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

* ‘பயண கட்டுப்பாடுகள் மட்டுமே பரவலை தடுக்காது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்,’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

* ஒமிக்ரான் இதுவரை 50 உருமாற்றங்களை அடைந்துள்ளது. இதில் 32 உருமாற்றங்கள், அதன் முள் புரோதத்தில் மட்டுமே நடந்துள்ளன.

* நேற்றைய புதிய பலியில் 403, கேரளாவில் பதிவாகி இருக்கிறது. இதில், 307 உயிரிழப்புகள் ஏற்கனவே இறந்து, கணக்கில் விடப்பட்டவர்கள். இவர்கள் நேற்றைய பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

* இருதினங்களுக்கு நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 6,900 ஆக குறைந்தது. ஆனால், அதன் பிறகு கடந்த 2 நாட்களாக திடீரென உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

* வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான்?

இந்தியாவுக்குள் ஒமிக்ரான் நுழைவதை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 4 வௌிநாட்டினருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அது, ஒமிக்ரான் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் உள்ள வைரஸ், ஒமிக்ரானா என்பதை அறிய, மரபணு பிரிப்பு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இதே விமான நிலையத்துக்கு பிரான்சில் இருந்து வந்த 3 பயணிகளுக்கும், லண்டனில் இருந்து வேறொரு விமானத்தில் வந்த ஒரு பயணிக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் மாதிரிகள் மேல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது.

* முதலில் வந்தது ஐரோப்பாவில் தான்

ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி கண்டறியப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு 11 நாட்களுக்கு முன்பாகவே, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் 2 பேருக்கு இந்த வைரஸ்  தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.  அதாவது, நவம்பர் 19, 23ம் தேதிகளில் இது உறுதியாகி உள்ளது. இவர்களில் ஒருவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாதவர்.

* கண்டுபிடித்த பெண் டாக்டர் கடும் கோபம்

தென் ஆப்ரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் 33 வருட கால மருத்துவராகவும் பணியாற்றி வரும் டாக்டர் ஏஞ்சலிக் கோட்சி தான், முதன் முதலாக ஒமிக்ரான் வைரசை கண்டுபிடித்து உலகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால், உலக நாடுகள் சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்து, கொரோனா அறிமுகமான போது ஏற்பட்டது போன்ற பெரிய பீதியை கிளப்பி வருகின்றனர். இது குறித்து கோட்சி கூறுகையில், ‘‘போஸ்வானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்த போது, வைரசின் மாறுபாட்டை பார்த்தேன். அதன் பெயர்தான் ஒமிக்ரான். எனது தொழில் தர்மத்தை கருத்தில் கொண்டு, என்னை அறியாமலேயே அதை உலக கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் இதை பெரிதாக்கி, தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் பரவி வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. ஆனால், தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட யாருக்குமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவில்லை. மேலும், யாரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் இல்லை. ஆனால், தென் ஆப்ரிக்காவுக்கு பிரிட்டன், ஐரோப்ப நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒமிக்ரானை பற்றி இன்னும் எங்களுக்கே ஒன்றும் தெரியாது. இது  வேகமாக பரவும் வைரசாக மாறினால், பெரும்பாலான மக்களுக்கு லேசான அறிகுறிகளுடன் நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாகதான் இருக்கும். பிரிட்டன் தேவையில்லாத பீதியை கிளப்பிக் கொண்டிருக்கிறது,’’ என்றார்.

Related Stories:

More