தொடர் மழை எதிரொலியால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய ஒகேனக்கல்

பென்னாகரம் : தொடர் மழை காரணமாக, சுற்றுலா பயணிகள் யாரும் வராததால், விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது. அங்குள்ள ஐவர்பாணி, மெயினருவி, ஐந்தருவி உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவிகளில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் சவாரி செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனை தொடர்ந்து, பரிசல் சவாரிக்கு விதிக்கப்பட்ட தடை, கடந்த 5 நாட்களுக்கு முன் விலக்கி கொள்ளப்பட்டது.

ஆனால், புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, விடுமுறை தினமான நேற்று, ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது. இதனால், ஒகேனக்கல் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வராததால், அங்குள்ள மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: