இது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சகாப்தம்: மன் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி:  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடந்த 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாகவும், ஸ்டார்ட் அப் நிறுவன உலகில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் பிரதமர்மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். நேற்று பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:  ‘நாட்டில் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நமது அனைவரின் பொறுப்பாகும். நாட்டில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

சிந்தனை, கண்டுபிடிப்பு, ஆர்வம், செய்ய முடியும் என மனப்பான்மை ஆகியவை மிகவும் முக்கியமாகும். இந்த மூன்று விஷயங்கள் ஒன்றிணைந்தால் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடிவுகள் எட்டப்பட்டு அற்புதங்கள் நிகழும். இப்ேபாதெல்லாம் நம்மை சுற்றி ஸ்டார்ட் அப் என்ற வார்த்தையையே அதிகம் கேட்கிறோம். இது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சகாப்தம் என்பது உண்மை தான். ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா முன்னிலையில் இருப்பதும் உண்மை தான். ஆண்டுக்கு ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முதலீடுகளை பெறுகின்றன. வேகமாக வளர்ந்து வருகின்றன. நாட்டில் உள்ள சிறிய நகரங்களில் கூட ஸ்டார்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இப்போதெல்லாம் யுனிகார்ன் என்ற வார்த்தை அதிகம் விவாதிக்கப்படுகின்றது. யுனிகார்ன் ஒரு ஸ்டார்ட் அப்  தான். அதன் மதிப்பு சுமார் ரூ.7 ஆயிரம் கோடியாகும்.

2015ம் ஆண்டு வரை ஒன்பது அல்லது 10 யுனிகார்ன் தான் இருந்தன. இப்போது இந்தியாவும் யுனிகார்ன் உலகத்தில் உயர பறக்கிறது என்பதை அறிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். உலகளாவிய பிரச்னைகளுக்கு  தீர்வு காண்பதில் ஸ்டார்ட் அப் மூலமாக இந்திய இளைஞர்களும் பங்காற்றுகின்றனர்.  டிசம்பர் மாதத்தில் கடற்படை தினம், கொடிநாள் கொண்டாடப்படுகின்றது. டிசம்பர் 16ம் தேதி 1971ம் ஆண்டு போரின் பொன்விழா வருகின்றது. இந்த நாட்களில் நமது ராணுவம், ராணுவ வீரர்கள், குறிப்பாக இந்த வீரம்மிக்கவர்களை ஈன்றெடுத்த தாய்மார்களை நான் நினைவு கூர்கிறேன்’. இவ்வாறு அவர் ேபசினார்.

தூத்துக்குடி மக்களுக்கு பாராட்டு

மன் கீ பாத்தில் பேசிய பிரதமர் மோடி ‘தூத்துக்குடி மக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். தூத்துக்குடி மக்கள், இயற்கை பேரிடரில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தீவுகள் மற்றும் திட்டுக்களில் பனை மரங்களை நடுகின்றனர். இந்த மரங்கள் புயல் மற்றும் சூறாவளி காலங்களில் உறுதியுடன் நிற்கின்றன. இதனால் இந்த பகுதியை பாதுகாப்பாதற்கான நம்பிக்கை பிறந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும் அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பிரதமர் தொடர்புகொண்டு பேசினார். ஆயுஷ்மான் கார்டு மூலமாக இதய நோய் சிகிச்சை பெற்று குணமடைந்த ராஜேஷ்குமார் என்ற பயனாளிகளிடம் பிரதமர் உரையாடினார். அப்போது, எந்தவகையான நோய் பாதிப்பு, எவ்வாறு சிகிச்சை பெற்றார் என்பது குறித்து பிரதமர் கேட்டறிந்தார். ஆயுஷ்மான் கார்டு இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு செலவாகி இருக்கும் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார். இதற்கு பயனாளி ராஜேஷ் ‘கார்டு இல்லாமல் இருந்திருந்தால் நிறைய செலவாகி இருக்கும், நீங்கள் மிகவும் உயர்ந்தவர். நீங்கள் எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘நான் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான்  எப்போதும் மக்கள் சேவையில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். எனக்கு இந்த பதவி, பிரதமர் பதவி எல்லாமே அதிகாரத்துக்காக இல்லை. சேவைக்காக மட்டும்தான். அரசின் முயற்சியால், அரசின் திட்டங்களால் ஒரு வாழ்க்கை மாறியது. அந்த வாழ்க்கை மாற்றத்தின் அனுபவம் என்ன? இதனை கேட்கும்போது அனுபவத்தை உணர முடிகிறது. மக்களுக்கும் திருப்தி அளிக்கிறது. மனதிற்கு திருப்தி தருவதுடன் மக்களிடம் இந்த திட்டத்தை கொண்டு செல்வதற்கு உத்வேகம் அளிக்கிறது’ என்றார்.

* பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி தற்போது அனைத்து பிரதான ஆடியோ மற்றும் மியூசிக் தளங்களிலும் ஒலிபரப்பப்படுகின்றது.

* ஸ்போட்டிபை, ஹங்கமா, கானா, ஜியோசவான், விங் மற்றும் அமேசான் மியூசிக் உள்ளிட்டவற்றிலும் கேட்கலாம்.

* மக்கள் எங்கு சென்றாலும் மன் கீ பாத் நிகழ்ச்சியை தடையின்றி கேட்க முடியும்.

Related Stories:

More