சென்னை ஐஐடியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும்: இயக்குநருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம்

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று ஐஐடி இயக்குநருக்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 20ம் தேதி சென்னை ஐஐடியின் 58வது பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 1959ம் ஆண்டு சென்னை ஐஐடி உருவாக்கப்பட்டபோது அதற்காக தமிழக அரசு 250 ஹெக்டேர் (617.5 ஏக்கர்) நிலத்தை ஐஐடிக்காக வழங்கியது.

அதிலிருந்து சென்னை ஐஐடியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு வகைகளில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. தற்போதைய அரசும் அதை தொடர்ந்து செய்யவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தாங்கள் தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஐஐடியின் தேசிய அளவிலான வசதியை அமைப்பதற்காக தற்போது ஆய்வில் உள்ள சைரோ-எலெக்ட்ரான் மைக்ராஸ்கோபியை வாங்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தீர்கள்.

சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்பது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். மாநில அரசு மற்றும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் உள்பட அந்த மாநிலங்களின் வாழ்த்து பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை தங்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன். எனவே, சென்னை ஐஐடியில் நடைபெற உள்ள அடுத்து வரும் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: