சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விருகம்பாக்கம் செல்லியம்மன் கோயில் அருகே இரவு நேரங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் போலீசார் செல்லியம்மன் கோயில் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டுப்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த போதைப் பொருள் வழக்கு, வழிப்பறி உட்பட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சதீஷ் (26) என்பவர், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இவர், ரயில் மூலம் வடமாநிலம் சென்று போதை மாத்திரைகள் மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் அதிக விலைக்கு போதை மாத்திரைகள் விற்று வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 41 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
