தெரு நாய்களுக்கு மாணவர்கள் உணவளிக்க கூடாது

சென்னை, டிச.10: தமிழ்நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக தெரு நாய் கடித்து பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது . இந்த நிலையில் தெரு நாய்கள் கடித்தால் உடனடியாக அதற்கான தடுப்பூசியும் அனைத்து மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் கால்நடை துறை சார்பில் தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களுக்கும் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் அவற்றை பிடித்து கருத்தடையும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது.

 அதில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.
 பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
 தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து விழிப்புணர்வினை காலை வணக்கக்கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
 தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவர் உட்பட்டிருப்பின் அதை எவ்வித தயக்ககமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
 பள்ளியினை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக சார்ந்த உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்.
 மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ, உணவளிப்பதோ தவிர்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்குதல் வேண்டும்.
ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வினை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
 பள்ளித் தலைமையாசிரியர்கள் ஒரு நோடல் அதிகாரியை நியமித்து, வளாகத்தின் பராமரிப்பு. தூய்மை மற்றும் தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வையிட வேண்டும்.
 அதிகாரியின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வகையில் இருத்தல் வேண்டும், மேலும் சார்ந்த அலுவலர் குறித்த விவரங்கள் சார்ந்த உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவித்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Related Stories: