அம்பத்தூர், டிச.9: அம்பத்தூர் மண்டல தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, பேரிடர் கால பணி உபகரணங்கள் வழங்குதல், தனியார் மயத்தை கைவிடுதல், வெளி பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பத்தூர் மண்டல தூய்மை பணியாளர்கள் சீருடை அணியாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தின்போது பேரணியாக சென்று மனு அளித்தல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை மாலை 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றனர்.
பின்னர் நேற்று காலை அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி தலைமையில் சீனியர் இன்ஜினியர் சீனிவாசன், மண்டல அதிகாரி பிரபாகரன் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் உழைப்போர் உரிமை இயக்க 7வது மண்டல தலைவர் ஹரி பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘பணி பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் பேசியிருந்தோம், அதை விரைவில் மாநகராட்சி ஆணையிரிடம் தெரிவிப்பதாக கூறினர். மேலும் போராட்டத்தை கைவிட்டு மாநகராட்சி சீருடை அணிந்து பணிக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நாங்கள் பணி நேரத்தில் போராட்டங்களை மேற்கொள்ளவில்லை. பணி முடிந்த பிறகு போராட்டம் மேற்கொண்டோம்.
பணி பாதுகாப்பை வலியுறுத்தி 5 மற்றும் 6 மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 127 நாளாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்டவற்றையும் இந்த பேச்சுவார்த்தையில் தெரிவித்தோம். அதிகாரிகளும் மண்டல குழு தலைவரும் சில கோரிக்கைகளை பரிசீலனை செய்யுமாறு எங்களிடம் கூறினர். நாங்களும் அதற்கு உடன்பட்டோம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. மாநகராட்சி சார்பில் கொடுத்துள்ள விதிகள் ஒழுங்காக பணிக்கு வராதவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக மட்டுமே என கூறினர். பணி பாதுகாப்பு உத்தரவாதமும் கேட்டிருந்தோம் அனைத்திற்கும் உத்தரவாதம் கொடுத்தனர். சரிவர பணிக்கு வராதவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதில் அதிகாரிகளின் கோரிக்கை நியாயமானதாக இருந்ததால் எங்கள் போராட்டங்களை திரும்ப பெற்றோம்,’ என கூறினார்.
