அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஒரத்தூர் - ஆரம்பாக்கம் நீர்த்தேக்கம் உடைந்தது

ஸ்ரீபெரும்புதூர்: சென்னை புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் உபரிநீர் அடையாற்றின் வழியாக கடலில் கலந்து மழைநீர் வீணாகி வந்தது. இதை தவிர்க்க நீர்நிலைகளில் நீர்த்தேக்கங்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது, இதன் ஒரு பகுதியாக ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஏரிகள் மற்றும் அவற்றின் அருகில் உள்ள தரிசு நிலங்களை இணைத்து சுமார் 763 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின்கீழ் ரூ.55.85 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டு பணி நடக்கின்றன.

இந்தப் புதிய நீர்த்தேக்கத்தில் 750 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கலாம்.  இதற்காக, முதற்கட்டமாக ரூ.6 கோடி மதிப்பில், ஒரத்துார் ஏரி, ஆரம்பாக்கம் ஏரிக்கு இடையே கரை எழுப்பினர். தொடர்ந்து கலங்கல், உயர்மட்ட கால்வாய், ரெகுலேட்டருடன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. தற்போதைய வடகிழக்கு பருவ மழையால் ஏரி நிரம்பி, உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேறி கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், அனைத்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி, அதன் உபரிநீர் ஒரத்தூர் ஏரி வழியாக வந்தது.

இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன கலங்கல் உடைந்து சிதறியது. மேலும் சுமார் 30 அடி அகலத்துக்கு கரை அரிப்பு ஏற்பட்டு, வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டது. விரைவில் ஆரம்பாக்கம் ஏரி, ஒரத்தூர் ஏரி, நீர்த்தேக்கம் ஆகியவற்றை ஒன்றாக்கி, அதன் கரைகள் மற்றும் கலங்கலை, மேலும் உயர்த்தி பலப்படுத்தப்படும் பணிகள் நடைபெற இருந்தவேளையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் நீர்த்தேக்கத்தின் கலங்கள் மற்றும் கரைகள் கடும் பாதிப்பு அடைந்து நாசமானது. தற்போது உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: