பள்ளிப்பட்டு பகுதியில் ஆந்திரா மணல் விற்பனை அமோகம்: பதுக்கிவைத்த 25 யூனிட் மணல் பறிமுதல்; வருவாய் துறையினர் நடவடிக்கை

பள்ளிப்பட்டு: ஆந்திராவிலிருந்து மணல் கடத்தி தமிழக எல்லைப் பகுதியில் வீடுகளுக்கு அருகே பதுக்கி வைத்த 25 யூனிட் மணல் வருவாய்த்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் வகையில் மணல் குவாரிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் எம்.சாண்ட் கொண்டு கட்டுமானம் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் கட்டுமான பணிகளுக்கு மணல் எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி லாரிகளில் தமிழகத்திற்கு அதிக அளவில் கடத்திவந்து எல்லைப் பகுதிகளில் பதுக்கி வைத்து கடந்த சில மாதங்களாக விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.

பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரி பேட்டையில் பல்வேறு இடங்களில் ஆந்திரவிலிருந்து கடத்தி வந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொதட்டூர்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் ராக்கி குமாரிக்கு ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனையில் பாரதி நகரில் வீடுகளுக்கு அருகில் மணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சரவணன் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 25 யூனிட் மணல் பறிமுதல் செய்தார். ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மணல் கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வரும் மணல் கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: