அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகள் 700 பேர் விடுதலை; தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். காவல்துறை மானியக்கோரிக்கையின் போது, 113வது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 10 மத்தியச் சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் அதனை செயல்படுத்தும் விதமாக முன் விடுதலை செய்ய ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்களை அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக, கற்பழிப்பு, தீவிரவாதம், மத மோதல், ஜாதி மோதல், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கைதிகள் குறித்து, முறையாக ஆய்வு செய்து வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அந்த வழிகாட்டுதல்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, 700 குற்றவாளிகளை விடுவிக்க 17 விதிமுறைகளை வகுத்து இன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின்படி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வரும் கைதிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகளின் அடிப்படையி்ல் நன்னடத்தை மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் 700 கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: